News Channel

முஸ்லிம்-சீக்கிய நல்லிணக்க மாநாடு!

முஸ்லிம்-சீக்கிய நல்லிணக்க மாநாடு!

குரு தேக் பகதூர் ஜீ என்கிற சீக்கிய குருவின் 350-ஆவது நினைவு நாளையொட்டி முஸ்லிம்-சீக்கிய அமைதியுரிமை மாநாடு தில்லியில் நடைபெற்றது. 

முஸ்லிம், சீக்கிய ஆளுமைகள் பலரும் திரளாகப் பங்கேற்ற இந்த மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும் கலந்துகொண்டார்கள். 

‘வரலாறு நம்மை வழிகாட்டுகின்ற சுடர் விளக்காக இருக்க வேண்டுமே தவிர, நம்மைப் பிளவுபடுத்துகிற ஆயுதமாக இருத்தலாகாது’ என்று ஜமாஅத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹசைனி குறிப்பிட்டார். அரசர்களும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் சரி - எவருக்குமே வரலாற்றைத் திரித்து எழுதுவதற்கான அதிகாரம் கிடையாது என்றும் அவர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 

கொடுமைகளை எதிர்த்து நிற்பதிலும் சமத்துவத்துக்குக் குரல் கொடுப்பதிலும் இஸ்லாமும் சீக்கியமும் ஒரே அலைவரிசையில் நிற்கின்றன என்றும் அந்தப் பொதுவான அம்சங்களை நாம் அதிகம் கொண்டாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். குரு தேக் பகதூர் இன்றும் அக்கிரமத்துக்கு எதிரான போராட்டத்துக்கான கலங்கரை விளக்கமாக, மதச் சுதந்திரத்துக்கான இன்றையக் காலத்துப் போராட்டங்களுக்கான வழிகாட்டும் தூணாக மிளிர்கின்றார் என்றும் ஜமாஅத் தலைவர் சொன்னார்.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லாஹ், மக்களவை உறுப்பினர்கள் முஹிபுல்லாஹ் காசிமி, அதீப் அஹ்மத், ஒய்வு பெற்ற நீதியரசர் இக்பால் அன்சாரி, தயா சிங், டாக்டர் குருமீத் சிங் (பஞ்சாப் பல்கலைக்கழகம்), மாநிலங்களாவை உறுப்பினர் எஸ் ஹர்தீப் சிங், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், ஜமாஅத் துணைத் தலைவர் எஞ்சினியர் முஹம்மத் சலீம், ஜாதேதார் கர்நைல் சிங், பீபீ சகுந்தலா ராவத், பீபீ பரம்ஜித் கவுர் என்று பலரும் பங்கேற்றார்கள்.