ஆசிரியர் தின சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆல் இந்தியா ஐடியல் டீச்சர்ஸ் அசோசியேஷன் (AIITA) திருச்சி கிளை சார்பில் ஆசிரியர் தின சந்திப்பு நிகழ்ச்சி 06.09.2025 அன்று திருச்சி சஸ்திரி சாலையில் அமைந்துள்ள KMS ஹாலில் நடைபெற்றது.
துவக்கமாக தைய்யிபா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் ஜனாபா ஷாஜிதா பேகம் அவர்கள் திருமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தி திருச்சி கிளை பொறுப்பாளர் முனைவர் ஹஜ் மெய்தீன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் ஆசிரியர்கள் சமூக கட்டமைப்பில் வகிக்கும் முக்கிய பங்கு, மாணவர்களின் வாழ்வில் அவர்கள் விதைக்கும் நற்பண்புகள் மற்றும் நன்னெறிகள் குறித்து வலியுறுத்தினார்.
பின்னர், AIITA மாநிலச் செயலாளர் ஜனாப் ஷேக் இஸ்மாயில் அவர்கள், AIITA அமைப்பின் நோக்கங்கள், அதன் கல்வி பங்களிப்புகள் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் குறித்து விரிவாக அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் P. ஆண்டனி லூயிஸ் மாத்யஸ் அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இன்றைய தலைமுறையை அறிவார்ந்ததாகவும், பொறுப்புள்ளவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் மாற்றுவதில் ஆசிரியர்களின் பங்கு எப்போதும் மறக்க முடியாதது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த AIITA – திருச்சி கிளைக்கு நன்றியைத் தெரிவித்தார்.
பின்னர், சமரசம் இருமாத இதழின் ஆசிரியர் ஜனாப் V. S. முஹம்மது அமீன் அவர்கள்
ஆசிரியர் தின சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் சமூகப் பொறுப்பு மற்றும் கல்வியின் மனிதநேயக் கண்ணோட்டம் குறித்து சிந்தனைத் தூண்டும் கருத்துக்களை பகிர்ந்தார்.
நிகழ்ச்சி நிறைவாக, அல்மா லூசண்ட் நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர் ஜனாபா K. நிஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இதில் நிகழ்ச்சியை முன்னெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்ததோடு, பங்கேற்ற ஆசிரியர்களின் பங்களிப்பையும் சிறப்பித்தார். முழு நிகழ்ச்சியையும் பேராசிரியர் உமர் பாரூக் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சியின் 14-ற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆசிரியர்களின் சேவையை பாராட்டியும், சமூக பங்களிப்பை முன்னிறுத்தியும், பொறுப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.