மாற்றத்திற்கான மாதம்
மாற்றத்திற்கான வேதம்
----------------
- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவரின் பெருநாள் செய்தி
இறைவனின் மாபெரும் கருணையினால் இந்த ஆண்டும் ரமளான் மாதத்தை அடைந்தோம். நோன்பு நோற்றோம். நின்று வணங்கினோம். வாரி வழங்கினோம். திருமறைக் குர்ஆனுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தினோம். நோன்பை நிறைவு செய்து பெருநாள் கொண்டாடுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்..!
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. திருக்குர்ஆனும் ரமளானும் நம்மிடம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? கடந்த ரமளானுக்கும் இந்த ரமளானுக்கும் இடையே நாம் மார்க்கத்தைப் புரிந்து கொண்டு எப்படி செயல்படுத்தியிருக்கின்றோம் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. ரமளானும், திருக்குர்ஆனும் நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நன்மைகளுக்காக மட்டுமே இந்த வேதமும், மாதமும் அல்ல. திருக்குர்ஆன் மாற்றத்திற்கான வேதம். ரமளான் மாற்றத்திற்கான மாதம்.
நாமும் மாற வேண்டும் இவ்வுலகையும் மாற்ற வேண்டும். இன்று உலகம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் திருக்குர்ஆன் வழிகாட்டியிருக்கிறது. தீர்வு வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் இறையச்சமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறது. முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக உலக அளவில் வெறுப்பும், அவதூறுகளும் அள்ளிவீசப்படுகின்ற காலத்தில் திருக்குர்ஆன் மூலம் அதற்கான பதிலை வழங்கியிருக்கின்றோமா என்பதை எண்ணிப்பார்க்க உகந்த வேளை இந்தப் பெருநாள் தருணம்.
இஸ்லாத்திற்குச் சாதகமாக மக்கள் கருத்தைச் செதுக்குவதில் இந்த ரமளானையும், இறைவேதம் குர்ஆனையும் நாம் எந்தளவு பயன்படுத்தியிருக்கின்றோம் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். வெறும் வழிபாடு, சடங்குகளுடன் இந்த மாதத்தை நாம் வழியனுப்பி வைத்துவிட முடியாது. இதிலிருந்து நாம் மட்டுமின்றி மனித சமூகமும் பயனீட்டிக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களையும் ரமளானில் பெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்.
உலகமே பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஃபலஸ்தீன மக்கள் படும் துன்பங்களும், துயரங்களும் சொல்லி மாளாது. இஸ்ரேல் அமெரிக்காவுடன் சேர்ந்து மிகப்பெரும் அட்டூழியத்தை உலகமே வேடிக்கை பார்க்க நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. எல்லா அறங்களையும் தூக்கி எறிந்துவிட்டு பச்சிளம் குழந்தைகளைக் கொல்கிறார்கள். இந்த அநீதியாளர்கள் பெரும் இழிவையும், தோல்வியையும் சந்திக்க வேண்டும். ஃபலஸ்தீன் வெல்ல வேண்டும். அதற்கான நமது பிரார்த்தனைகள் இப்போதும், எப்போதும் இருக்க வேண்டும். ஃபலஸ்தீன மக்களின் மகிழ்வான பெருநாள் கொண்டாட்டங்களில்தான் நமது மகிழ்வும் அடங்கியிருக்கிறது. அவர்களோடு நாம் உறுதியாக நிற்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தீய ஆட்சியாளர்களின் தீங்கிலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்து இந்த உலகை அமைதியின், நீதியின் நிழலில் இளைப்பாறச் செய்வானாக!
அனைவருக்கும் இதயம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்.
மெளலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி