சீமானின் பேச்சுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்
----------------------------------------
அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் இஸ்லாமியர்கள் குறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களைக் குறித்தும், இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறித்தும் அவரது மதிப்பீடும், புரிதலும் அவரது அறியாமையையும், வெறுப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஒருபோதும் ஓட்டுப் போடவில்லை என்று அவருடைய தலைவர் மீது ஆணையிட்டுச் சீமான் சொல்வது எந்தளவு உண்மை என்பதை நாம் தமிழர் கட்சியிலுள்ள முஸ்லிம்கள் அறிவார்கள். திமுகவிற்கு வாக்களிப்பதை முஸ்லிம்கள் ஆறாவது கடமையாகக் கருதுவதாகச் சீமான் சுட்டிக்காட்டியிருப்பது முஸ்லிம்கள் குறித்த அவரது மிகக் கீழான மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறது.
யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அறிவும், தெளிவும் முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறது. அந்த அறிவும், தெளிவும் இருப்பதினால் அவர்கள் நாம் தமிழருக்கு பெருவாரியாக வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைத் தங்கள் உயிருக்கும் மேலாக மதித்துப் பின்பற்றும் கொள்கைச் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். இறைத்தூதரின் ஒவ்வொரு அசைவிற்கும், சொல்லுக்கும் ஏன், எதற்கு என்ற எதிர் கேள்வி இல்லாமல் அப்படியே கீழ்ப்படிந்து நடப்பவருக்குப் பெயர்தான் முஸ்லிம். எனவேதான் 1450 ஆண்டுகள் கடந்தும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் உலகில் வாழும் கோடான கோடி முஸ்லிம்களால் அப்படியே பின்பற்றப்படுகிறது. உலகம் உள்ளளவும் பின்பற்றப்படும். இஸ்லாம் குறித்த இந்த அடிப்படையைக் கூட விளங்காமல் சீமான் பேசியிருப்பது அவரது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.
தனது பொறுப்பற்ற பேச்சுக்கு சீமான் வருத்தம் தெரிவிப்பதுடன் மத விவகாரங்களில் விளையாட்டுத்தனமாகக் கருத்துச் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறைத்தூதர் குறித்தும், இஸ்லாம் குறித்தும் சீமான் அறிவதற்கு முன்வர வேண்டும்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)
ஊடகத் துறை,
தமிழ்நாடு, புதுச்சேரி