News Channel

பத்திரிகைச் செய்தி

பத்திரிகைச் செய்தி
22 ஆகஸ்ட் 2025  வெள்ளிக்கிழமை 

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டெல்லியில் பிரம்மாண்டப் போராட்டம் - 
காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் 
இஸ்ரேலின் திட்டங்களைக் கண்டித்து, 
அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

புது தில்லி: 
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதல்களைக் கண்டித்தும்,
காசாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று தலைநகர் தில்லியில் 
பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றது.

காசாவில் இஸ்ரேல் இராணுவ 
அரசியல் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான 
எந்தவொரு முயற்சியும், 
ஏற்கனவே முற்றுகையிடப்பட்டுள்ள அந்தப் பகுதியில் நடைபெறும் மனிதாபிமானப் பேரழிவை 
மேலும் மோசமடையச் செய்யும் என பங்கேற்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.  

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், 
மதம், கருத்தியல், சமூகப் பின்னணி ஆகியவற்றைக் கடந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். 

பல்வேறு தரப்பைச் சேர்ந்த குடிமக்கள், 
மாணவர்கள், சமூக, மத, அரசியல் தலைவர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுச் சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பல்வேறு மத, கலாச்சார மற்றும் 
சமூகப் பின்னணியைச் சேர்ந்த மக்களின் பங்கேற்பு, 
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல, 
அமைதி மற்றும் நீதியை விரும்பும் இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் பொதுவான கவலை என்பதை உறுதியாக எடுத்துரைத்தது.  

போராட்டத்தில் உரை நிகழ்த்தியவர்கள் 
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்தனர். 

இது ஒரு தொடர்ச்சியான இனப்படுகொலையாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். 
2023 அக்டோபர் முதல், 
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ ஒரு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அகதிகள் முகாம்கள் முறையாக இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. 
மேலும், 
பரவலான பட்டினி மற்றும் காசாவின் சுகாதார மற்றும் துப்புரவு அமைப்புகளின் முழுமையான அழிப்பு குறித்த அறிக்கைகளை முன்வைத்து, 
முற்றுகை உடனடியாக நீக்கப்படாவிட்டால் உடனடி பஞ்சம் ஏற்படும் என எச்சரித்தனர்.  

போராட்டக்காரர்கள், 
இந்தியாவின் முன்னணி முஸ்லிம் அமைப்புகள் 
மற்றும் பொதுச் சமூகக் கூட்டமைப்புகளால் 
ஆதரிக்கப்பட்ட பாலஸ்தீனம் குறித்த 
கூட்டறிக்கையில்
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கோரிக்கைகள்:
1. பன்னாட்டு சமூகமும், உலக வல்லரசுகளும் உறுதியான நடவடிக்கை எடுத்து, உடனடி போர் நிறுத்தத்தை உறுதி செய்ய வேண்டும்.  

2. உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் காசாவிற்கு செல்ல அவசரமாக 
மனிதாபிமான பாதைகள் திறக்கப்பட வேண்டும்.  

3. பன்னாட்டு சமூகமும், இந்திய அரசும் இஸ்ரேலின் செயல்களைக் கண்டித்து, அதனுடனான அனைத்து இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்புகளை நிறுத்த வேண்டும்.  

4. உலக வல்லரசுகளும், இந்திய அரசும், 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவை ஆதரிக்க வேண்டும்.

 மேலும், 
பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், 
சுதந்திரமான இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்கவும் ஐ.நா. பொதுச் சபையின் அழைப்பை ஆதரிக்க வேண்டும்.  

5. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கும் இந்தியாவின் நீண்டகால பாரம்பரியத்தை உறுதிப்படுத்தி, 
சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பன்னாட்டு முயற்சிகளை 
இந்தியா தீவிரமாக ஆதரிக்க வேண்டும். 
 
6. இந்தியாவின் பொதுச் சமூகமும், நிறுவனங்களும் இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணித்தல், 
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் அமைதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.  

முஸ்லிம் பெரும்பான்மையுள்ள நாடுகள், 
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் மீது அதிகபட்ச அழுத்தத்தைப் பிரயோகித்து, இந்த மோசமான சூழ்நிலையை
முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என போராட்டத்தில் வலுவான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 இனப்படுகொலைக்கு முன்னால் மௌனமாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும், 
அரசுகள், 
நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் தார்மீக மற்றும் அரசியலமைப்பு கடமைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனவும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.  

இந்த பிரம்மாண்டமான இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தில் உரையாற்றிய முக்கிய பிரமுகர்கள்:  

- சையத் சஆதாதுல்லாஹ் ஹுசைனி, 
தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH )

- மவுலானா ஹக்கீமுதீன் காஸ்மி, 
பொதுச் செயலாளர், ஜமியத் உலமாயே ஹிந்த்  

- பேராசிரியர் அப்ரோவானந்த், 
தில்லி பல்கலைக்கழகம்  

- பேராசிரியர் வி.கே. திரிபாதி  

- வழக்கறிஞர் லாரா ஜெய்சிங், 
மூத்த வழக்கறிஞர், மும்பை உயர் நீதிமன்றம் 
 
- நிஷா சித்து, பொதுச் செயலாளர், NFIW  

- முஹம்மது அதீப், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்
  
- ஜியாவுதீன் சித்திக்கி, தலைவர், 
வஹ்தத் இ இஸ்லாமி  

- ஜே.பி. ரைசுதீன், தேசியத் தலைவர், WPI  

- முஃப்தி அப்துல் ராஜிக், 
ஜமியத் உல் உலமா, தில்லி  

- அப்துல் ஹபீஸ், தலைவர், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

- ஷேக் நிஜாமுதீன், 
உதவி பொதுச் செயலாளர், மில்லி கவுன்சில்  

- மலிக் முஹ்தசிம் கான், 
துணைத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH )