இறை அழைப்பை ஏற்றார் இனிய அழைப்பாளர்
மெளலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மூத்த உறுப்பினர். தம் வாழ்நாளின் பெரும்பகுதியை சற்றேறக்குறைய 70
ஆண்டுகளாக இஸ்லாமிய இயக்கத்திற்காகச் செலவிட்டவர்.
தமிழ்மாநில அமைப்புச் செயலாளர்,
வேலூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டவர்.
ஏழு மீகாத்களாக (28 ஆண்டுகள்) மாநில ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பங்களிப்பை வழங்கியவர்.
இஸ்லாமிக் சென்டர் வேலூரின் அடிநாதமாகத் திகழ்ந்ததோடு அதன் முதல் துணைப்பொதுச் செயலாளராக, முதல் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பன்னூல் ஆசிரியர்
மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானிஅவர்கள் இன்று (25/04/2025) அதிகாலை இறைவனின் அழைப்பை ஏற்றார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் அழைப்புப் பணியில் பேரார்வம் கொண்டவர்.
புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களைச் சந்திக்க தென் மாவட்டங்களின் கிராமங்களுக்கு அதிகம் பயணம் செய்தார்.
இஸ்லாமிக் சென்டர் வேலூரில் உருவாவதற்கு அவரது அழைப்பின் தாகம் ஓர் உந்து சக்தியாக இருந்தது.
தமது சொல்லால் மட்டுமின்றி எழுத்தாலும் இறைமார்க்கச் செய்தியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பல நூல்களை எழுதினார்.
நபி(ஸல்)அவர்கள் தாம் வாழும் காலத்தில் பல நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியைக் கடிதங்களின் வாயிலாக எடுத்துரைத்தார்கள். அதை அழகிய முன்மாதிரியாகக் கொண்டு அன்றைய குஜராத் முதல்வர் மோடி,
அத்வானி, மோகன் பகவத் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பியல் ரீதியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
அதுபோல ஃபாலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியா நடந்துகொண்ட முறை அநீதியானது என்பதைச் சுட்டிக்காட்டி, இடித்துரைத்து சவூதி மன்னருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய
சகோதர சகோதரிகளுக்காகத் தொடங்கப்பட்டட பெண்களுக்கான குல்லியத்துல் மஆரிஃப், ஆண்களுக்கான குல்லியத்துஸ் ஸலாம் கல்லூரிகளின் மூலம் இஸ்லாமியப் பட்டப்படிப்பைத் தொடங்கியபோது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
இஸ்லாமிக் சென்டர் வேலூர் பிரைமரி நர்சரி பள்ளியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர்.
மிகச் சிறந்த நிர்வாகியாகவும் மெளலானா அவர்கள் திகழ்ந்தார்கள்.
சமய நல்லிணக்கத்திலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.
மதுரை ஆதீனம்,
குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சங்கரமடத்திற்குச் சென்று சங்கராச்சாரியாருக்குத் திருக்குர்ஆனை வழங்கி உரையாடினார்.
குன்றக்குடி அடிகளார் தொடங்கிய திருவருட் பேரவையின் துணைச் செயலாளராகவும் பங்களிப்பு செய்தவர்.
சமய நல்லிணக்க நிகழ்வுகளின் தொடக்கப் புள்ளியாக இருந்தார்.
ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை அழைத்து நிகழ்வுகளை நடத்தினார்.
அதுவே மீலாது நிகழ்வுகளில் சகோதர சமுதாய ஆளுமைகளை அழைத்துப் பேசுவதற்கான தொடக்கமாக இருந்தது.
ஆழ்ந்த இறைப்பற்றும், ஆழமான சிந்தனையாற்றலும் கொண்ட மெளலானா அவர்கள் தம் இறுதி மூச்சுவரை இறைமார்க்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
மிகச் சிறந்த ஆளுமையான மெளலான ஹஃபீஸ் ரஹ்மானி அவர்களின் இழப்பு இஸ்லாமிய அறிஞர்களின் உலகில் ஏற்பட்ட மிகப் பெரும் இழப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மெளலானா அவர்களின் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள்புரிவானாக!
உயரிய சுவன பாக்கியத்தை வழங்குவானாக!
அவரது குடும்பத்தினர், இயக்கத் தோழமைகள் அனைவருக்கும் அழகிய பொறுமையை வழங்குவானாக!
மெளலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு, புதுச்சேரி