12 செப்டம்பர் 2024
பத்திரிகையாளர் அறிக்கை
மௌலானா கலிம் சித்திகி மற்றும் மௌலானா உமர் கவுதம் உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது:
ஜமாஅத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி.
புது தில்லி: சட்டவிரோத மதமாற்ற வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு மௌலானா கலிம் சித்திகி, மௌலானா உமர் கவுதம் மற்றும் 14 பேருக்கு அண்மையில் என்ஐஏ-ஏடிஎஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கையில், தேசிய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 417,120B, 153A, 153B, 295A, 121A, 123 மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் (பிரிவு 3, 4 மற்றும் 5) ஆகிய பிரிவுகளின் கீழ் மௌலானா கலிம் சித்திகி, மௌலானா உமர் கவுதம் மற்றும் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை வரையறைப்படுத்துவது தொடர்பாக மாண்புமிகு நீதிமன்றத்தின் மதிப்பீட்டுடன் நாங்கள் முற்றிலும் வேறுபடுகிறோம்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில்,
யாரேனும் ஒருவரை மதம் மாறும் படி கட்டாயப்படுத்த முடியுமா?
இஸ்லாமும் அதை அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு தனிநபருக்கும் தாம் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுப்பதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமை நமது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்த அதிகாரமும் ஒரு குடிமகனின் இந்த உரிமையை பறிக்க முடியாது. "பயங்கரவாதம், சட்டவிரோத சதி, பகைமையை ஊக்குவித்தல், மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களை சதி செய்தல்" என்ற குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை ஆதாரமற்றது மட்டுமல்லாமல்,
ஆழமாக கவலைக்குரிய முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள், நமது அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை குறைத்து மதிப்பிடுவதாக நாங்கள் கருதுகிறோம். எந்தவிதமான அச்சமோ அல்லது நிர்பந்தமோ இன்றி தமது மதத்தை பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையை நடைமுறைப்படுத்துகின்ற சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தியை அனுப்புவதற்காக இந்த முழு வழக்கும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
" சில ஊடகங்களின் பரபரப்பான எதிர்வினைகளுடன் மௌலானா சித்திகி மற்றும் மௌலானா கவுதம் கைது செய்யப்பட்ட விதம், பயம், அச்சுறுத்தல் மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்திற்காக இந்த முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இந்த வழக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது,
ஒருவர் தேர்ந்தெடுத்த மதத்தை கடைப்பிடித்து பரப்பும் அடிப்படை உரிமையின் மீது தடையை விதிக்கிறது,.
உண்மையான பொதுப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக ஒரு சமூக மற்றும் உணர்ச்சி ரீதியான சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் வருத்தமளிக்கிறது.
இத்தகைய அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும்படி நீதியை நேசிக்கும் மக்களையும், அமைப்புகளையும்,
அரசியல் கட்சிகளையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு தீர்வு காண உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என நம்புகிறோம்.
இந்த வழக்கு அடிப்படை உரிமைகள், தனிநபர் சுதந்திரம் மற்றும் இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் தொடர்பானது.
இந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறுவது பெரும்பான்மைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் ஆதரிப்பதோடு ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாகும்".
வழங்கியவர்:
சல்மான் அகமத்
தேசிய உதவி செயலாளர், ஊடகத் துறை. ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி