"பத்திரிக்கை செய்தி"
வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்குமான நடைமுறைகளை எளிமைப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மெளலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ நன்றி
புதிதாக பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கட்டுவதற்கும் ஏற்கனவே செயல்பட்டுவரும் வழிபாட்டுத்தலங்களைச் சீரமைப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் மிகப் பெரிய சிக்கல் நிலவி வந்தது. பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் காத்திருக்க வேண்டிய சூழலில் அத்தியாவசமான புத்துப்பித்தலைக் கூடச் செய்ய இயலாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
தடையில்லாச் சான்றிதழ் பெற பல ஆண்டுகள் தொடர்ந்து அலைந்தும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தன. இதனால் தொழுகைக்கான இடம் இல்லாமல் பல இடங்களில் மக்கள் நெடுந்தொலைவு செல்ல வேண்டிய சூழல் நிலவி வந்தது.
முஸ்லிம் சமுதாயம் முதலமைச்சரிடம் இது குறித்து கோரிக்கை வைத்ததையடுத்து புதிய உத்தரவை வழங்கி இப்பிரச்னைக்கு தீர்வை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிமேல் பயன்பாட்டில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களை மராமத்துச் செய்யவோ, புதுப்பிக்கவோ, இடித்துவிட்டு புதிதாகக் கட்டவோ மாவட்ட ஆட்சியரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியதில்லை. ‘வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக பெறப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள் முப்பது நாள்களுக்குள் விசாரணை செய்து முடிவுகளைத் தெரிவிக்கவேண்டும்’ என்ற அறிவிப்பும் வரவேற்புக்கு உரியது.
இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொதுவான செயல்பாட்டு வழிமுறை(standard operating procedure) குறித்து மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்’
ஊடகத்துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி