News Channel

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு


2024 மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு எதிரான வலிமையான கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கட்சிகளுக்கிடையேயான தேர்தல் அல்ல. ஜனநாயகத்திற்கும் வகுப்புவாதத்திற்குமான தேர்தல். வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதன் மூலமே நம்
நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற முடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதை உணர்ந்துதான் ஜனநாயக சக்திகள் பல்வேறு சமரசங்களுடனும், விட்டுக் கொடுப்புகளுடனும் கைகோர்த்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

வகுப்புவாதக் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் நமது வாக்குகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழகத்தின், இந்தியாவின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே தமிழ் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளது.


இந்தத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன்பயீ 

'வகுப்புவாதம் என்பது சிறுபான்மை, தலித்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானதுதான் வகுப்புவாத ஃபாஸிசம். எனவே ஜனநாயகம் வலுப்பெற வேண்டுமென்றால் ஃபாசிஸம் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கான நல்வாய்ப்பாகவே இந்தத் தேர்தலை ஜமாஅத் நோக்குகிறது. 

ஆதரவளிப்பதுடன் மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்களும், ஊழியர்களும் களப்பணியாற்றுவார்கள். பாஜக ஆட்சியின் படுதோல்வியையும், அது நாட்டிற்கு ஏற்படுத்திய கேடுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம். அத்துடன் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெறவும், வாக்குச் செலுத்த மக்கள் பணம் வாங்குவது பாவச்செயல் என்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள உள்ளோம்.' என்று கூறினார்.