News Channel

தார் மிக் ஜன்மோர்ச்சா

பத்திரிகைச் செய்தி

*சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் சமயத் தலைவர்களின் பங்கு* என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக் கிழமை அன்று மத்திய பிரதேசம் போபாலில் தர்மிக் ஜன் மோர்ச்சா உருவாக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, *சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் சமயத் தலைவர்களின் பங்கு* என்ற மையக் கருத்தில் கருத்தரங்கம் போபாலில் உள்ள சில்வர் இன் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் சமூக, சமய ஒற்றுமையை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து சமயத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் துணைத் தலைவரும், தர்மிக் ஜன் மோர்ச்சாவின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான பேரா. எஞ்சினியர் முஹம்மது சலீம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தர்மிக் ஜன் மோர்ச்சா 2001ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.  மோர்ச்சாவின் பணிகள், முயற்சிகள் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சையத் அலி விளக்கினார். 

மனித இனத்தை ஒன்றினைப்பதுடன், சமுதாயத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை சமயம் ஊக்குவிக்கிறது என பேரா. எஞ்சினியர் முஹம்மது சலீம் கூறினார். சில அரசியல் பிரபலங்கள் மதத்தை அரசியல் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்துகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்துவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பீம் சிங், சஞ்சய் குமார் கைர்வார், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பாஸ்டர் சாமுவேல் பி பிரான்சிஸ், அருட்தந்தை ஈஸ்வர்தாஸ், அருட்தந்தை ஆல்பிரட் டிசோசா, சமூக சேவகர் இஞ்சினியர் அஜய் சிங், காயத்ரி பரிவாரைச் சேர்ந்த ராமச்சந்திர ராய்க்வார், சமூக சேவகர் அசோக் ஜுனேஜா, பௌத்த சமூகத்தைச் சேர்ந்த பாண்டே ராகுல் ஜி மற்றும் பிக்குனி சங்கமித்ரா, அனைத்து மத நல்லிணக்க மேடையின் நிறுவனர் தந்தை ஆனந்த் முதுங்கல், குருத்வாரா ஆனந்த்நகரைச் சேர்ந்த நரேந்திர தீட்சித், ஞானி குர்விந்தர் சிங், குஃபா கோயில் மஹந்த் பண்டிட் டாக்டர் ஆர்.பி. திரிபாதி, 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் டாக்டர். ஹமித் பெய்க், முகமது இம்தியாஸ், டாக்டர் ஷாஹித் அலி, மற்றும் பிரம்மா குமாரி லீலா பெஹன், மற்றும் பிரம்மா குமாரி ராஜ்குமாரி உட்பட பல்வேறு சமூகங்களை சார்ந்த ஆன்மிகத் தலைவர்கள்
கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.  

சமூகத்தில் அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டிய அவசியத்தை பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும் அனைத்து மதத்தினரும் இனைந்து கூட்டு முயற்சிகளை எடுக்க அழைப்பு விடுத்தனர்.

பேராசிரியர் சலீம் தனது தலைமை உரையில், "நமது நாடு பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பெரும்பாலான மதங்களின் தாயகமாக உள்ளது. நாம் பல ஆண்டுகளாக இங்கு ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். பன்முகத்தன்மை நமது பலவீனம் அல்ல, நமது பலம். நாம் இங்கு ஒன்றாக அமர்ந்திருப்பது தான்  உண்மையான இந்தியாவின் அடையாளம். பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், குடிமக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது அவசியம். சச்சரவுகளுக்கு மதம்தான் காரணம் என்பது இன்று பொதுவாக நிலவும் தவறான கருத்து. இது உண்மையல்ல. மதத்தை தவறாகப் பயன்படுத்துவதே சச்சரவுகளின் உண்மையான வேர். சுயநலத்திற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துவதே சமூகப் பாகுபாடுகளுக்கு உண்மையான காரணம். மதத் தலைவர்களிடையே உரையாடல் மிகவும் அவசியமானது. இந்த மேடை பரஸ்பர உரையாடலுக்கானது. அதனால் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்க முடியும். சமுதாயத்தில் ஒத்தக் கருத்துடைய விசயத்தில் நாம் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். சமூகத்தில் அவ்வாறு செயல்படுவதன் மூலம், சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செய்தியை தர முடியும். நமது கருத்துக்கள் மாறுபடலாம். யாராவது உடன்படவில்லை என்றால், நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருவருக்கொருவர் முழு மரியாதை கொடுக்க வேண்டும். சமயத் தலைவர்களுக்கான ஒரு மேடை தேவைப்படுகிறது. எனவே, அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்படுகின்றன." என கூறினார்.

தர்மிக் ஜன் மோர்ச்சாவை நிறுவியதன் நோக்கத்தை சையத் அலி விரிவாக விளக்கினார். அனைத்து மதத் தலைவர்களுக்கும் நினைவுச் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சையது அலி அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும், கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி கூறினார்.

 வெளியீடு:
 தர்மிக் ஜன் மோர்ச்சா, மத்திய பிரதேசம்
 +91 84508 90275