15-02-2024
பத்திரிக்கைச் செய்தி
*விவசாயிகளின் குறைகளை அரசு தீர்ப்பதுடன், போராடும் உரிமையை பாதுகாக்க வேண்டும்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்*
புதுடெல்லி: டெல்லியின் எல்லையோர மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) கண்டித்துள்ளது. அவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையைப் பாதுகாக்கவும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
JIH துணைத் தலைவர் பேராசிரியர் எஞ்சினியர் சலீம் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், “பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 200 விவசாய சங்கங்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். அதேவேளையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். ஹரியானாவில் விவசாயிகளை தடுக்க முள்கம்பிகள், போலீஸ் தடுப்புகள் பயன்படுத்துவதும், ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், அவர்கள் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை நசுக்கும் செயலாகும். அமைதியாக போராட்டம் நடத்துபவர்களை தன்னிச்சையாக கைது செய்து காவலில் வைப்பதை அனுமதிக்கக் கூடாது. அரசின் இத்தகைய அடக்கி ஆளும் அணுகுமுறை விவசாயிகளை மேலும் அந்நியப்படுத்தும். மேலும் விவசாயிகளின் நலனில் அரசு அக்கறை கொள்ளாமல், அவர்களின் குறைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது விவாதிக்கவோ தயாராக இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.” என கூறினார்.
"டாக்டர் சுவாமிநாதனுக்கு அரசு பாரத ரத்னா வழங்கியது. ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகும், விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தில் (NCF) குறைந்தபட்ச ஆதரவு விலை MSP பற்றி டாக்டர் சுவாமிநாதனின் பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் MSP-இன் சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காக கோருகின்றனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டாலும், விவசாயிகளின் எதிர்ப்புக் குரலை அடக்க அடக்குமுறை நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அரசிற்கு உரிமை இல்லை. இதனால் நிலைமையை மோசமாக்கும். மேலும், நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும். விவசாயிகளின் தலைவர்களிடம் பேசி அவர்களின் கோரிக்கைகளை அரசு செவியேற்க வேண்டும். விவசாயத்துறை தொடர்பாக புதிய கொள்கையை வகுக்கும் முன் விவசாயிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருதுகிறது. போராட்டங்களை வன்முறைக் களமாக மாற்ற சதித்திட்டம் தீட்டுபவர்களை அரசு கண்காணிக்க வேண்டும்"