News Channel

பத்திரிக்கை அறிக்கை

31-01-2024

*பத்திரிகை அறிக்கை!*

*ஞான வாபி மஸ்ஜித் குறித்த திசைதிருப்பும் பரப்புரை வேதனையளிக்கின்றது :
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 

புதுதில்லி:  ‘ஞானவாபி பள்ளிவாசல்  தொடர்பாக சில வகுப்புவாத சக்திகளாலும்  விஷமிகளாலும் திசைதிருப்பும் ஏமாற்றுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்திய தொல்லியல் துறையின்(ஏ.எஸ்.ஐ.,) அறிக்கைக்கு  தவறான பொருளைக் கற்பித்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி,  நீதித்துறை மீது தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டில்   மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து இரண்டு மதத்தாருக்கு இடையில் பிளவு உருவாக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிக்கையை இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் திட்டவட்டமான இறுதிச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் ஜமாஅத்தின் நிலைப்பாடு ஆகும்’ என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் துணைத் தலைவர் *மலிக் முஅதஸிம் கான்* வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: ‘1991 வருடத்திய வழிபாட்டுத் தலங்கள் சட்டம் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 3-ஆவது பிரிவு கறாராகவும் உறுதியோடும் பின்பற்றப்பட வேண்டும். 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த அதே நிலையில் பொது வழிபாட்டுத் தலங்களின்  மத அடையாளத்தையும் தனித்தன்மையையும் தக்க வைப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் இந்தச் சட்டம் உறுதியளிக்கின்றது.

‘நம்பிக்கையின்’ அடிப்படையில் பிற மதத்தாரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான உரிமைக்கோரல்களையும், ஒரு மதத்தாரின் வழிபாட்டுத் தலத்தில் இன்னொரு மதத்தின் வழிபாட்டுக் கட்டடங்களின் வெளிப்படையான அடையாளங்கள் இருக்கின்றன என்கிற வாதங்களையும் அடிப்படையாக ஆக்கிக் கொள்வோமேயானால் உரிமைக்கோரல்கள், மறுத்துரைக்கின்ற வாதங்கள் ஆகியவற்றின் தொடர் தொடங்கி நீண்டுகொண்டே போகும். 

எடுத்துக்காட்டாக 84,000 க்கும் அதிகமான பௌத்த விகாரங்களையும் சிலைகளையும் மன்னர்கள் அழித்து விட்டதாக பௌத்தர்கள் கூறுகின்றார்கள். இதேபோல், ஜைனர்களும் தங்களுடைய ஆயிரக்கணக்கான ஜைனக் கோவில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுவிட்டதாகவும், கிட்டத்தட்ட இந்து புனிதத் தலங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் ஜைனக் கோவில்களாக இருந்தவைதாம் என்று கூறுகின்றனர்.  இந்துக்கள் கூட 2000 பள்ளிவாசல்களின் பட்டியலைத் தயாரித்து இருக்கின்றார்கள். அந்தப் பள்ளிவாசல்கள் கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று அவர்கள் வாதிடுகின்றார்கள். இந்த வழிபாட்டு தலங்கள்கூட  இன்று இவ்வாறு புதியதாக உரிமை கோரி கிளம்பி இருப்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுமா, என்ன? இது குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும்தாம் வித்திடும். எனவே, வரலாற்றை திரிக்கவோ சீர்குலைப்பற்கோ  எவருக்கும் அனுமதி வழங்கப்படலாகாது. வாக்கு வங்கி அரசியல் ஆதாயங்களுக்காக உணர்வு பூர்வமான பிரச்னைகளைக் கிளப்புவதற்கும் எவரையும் அனுமதிக்கக் கூடாது. 

 ‘ராம ஜென்ம பூமி - பாபரி மஸ்ஜித் வழக்கிலும்கூட மஸ்ஜிதின் அடியில் இஸ்லாமல்லாத  கட்டட எச்சங்கள் இருப்பதாக ஏஎஸ்ஐ வாதிட்டது.  என்றாலும், உச்ச நீதிமன்றம், தொல்லியலிலும் அகழ்வாராய்ச்சியிலும் தனிச் சிறப்பு மிக்கவர்களாக முத்திரை பதித்த புகழ்பெற்ற வல்லுநர்களின் கருத்துகளுக்கே முன்னுரிமை தந்தது. ஏற்கனவே இருந்து வந்த இராமர் கோவிலை இடித்து  பாபர் மஸ்ஜிதைக் கட்டப்பட்டதற்கான எந்தவித  சாத்தியமும் இல்லை  என்றே அவர்கள் கூறி இருந்தனர். 

மலிக் முஅதஸிம் கான் தொடர்ந்து கூறியதாவது : ‘ஞானவாபி மஸ்ஜித் ஐ தொடர்பான ஏ.எஸ்.ஐ-இன் அறிக்கையை துறை சார் வல்லுநர்களைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். தீர்ப்பை நீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்.   பக்கச்சார்பான ஊடகத்தின்  பரப்புரையை நம்பக் கூடாது’ எனும் அகில இந்தியமுஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கருத்தை  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரிக்கிறது. 

‘இன்று உண்மை, நீதி போன்ற மாண்புகளை புறம் தள்ளிவிட்டு அரசு நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து  அந்த அரசு நிறுவனங்களை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஆதரவாக இயங்க வைப்பதற்கும் தொடர் முயற்சிகள் நடந்து வருவது கவலைக்குரியதாகும். ஞானவாபி மஸ்ஜித் தொடர்பாக நீதித்துறையின்  உறுதியான இறுதித் தீர்ப்பு வரும் வரை அதனைக் குறித்து எந்த கருத்தையும் உருவாக்கி கொள்ள  வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். நம்முடைய நாடு ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் எந்தவொரு பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கும்  எத்தகைய சிறப்பு உரிமைகளோ  சலுகைகளோ வழங்கப்படவில்லை.

வெளியீடு:
கே.கே.சுஹைல்
செயலாளர், ஊடகத்துறை, ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த்.

அலைபேசி: 7290010191
முகவரி: ஈ 321 அபுல் ஃபஸல்  என்க்லேவ்,  ஜாமியா நகர்
ஓக்லா, புது தில்லி, 110025