News Channel

பத்திரிக்கை அறிக்கை

6 ஜனவரி 2024

 பத்திரிக்கை செய்தி - 1

"சுதந்திரமற்ற ஜனநாயக நாடாக இந்தியா மாறுகிறது"
 
அரசியலமைப்பை பின்பற்றும் ஜனநாயகத்திலிருந்து நமது தேசம் சுதந்திரமற்ற, பெரும்பான்மைவாத ஜனநாயக நாடாக சரிவதைக் குறித்து தனது கவலையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வெளிப்படுத்துகிறது.  அதிகரிக்கும் பல அசம்பாவிதங்கள் இந்தக் கவலையை உறுதிப்படுத்துகின்றன. சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கிட்டத்தட்ட முழு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் (ராஜ்யசபா 46 எம்.பி.க்கள் மற்றும் லோக்சபா 100 எம்.பி.க்கள்) சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சி இல்லாமல், அவைகளில் பதில் சொல்லும் பொறுப்பு என்பதே இல்லை. அரசின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்கவில்லை.  இதன் விளைவாக, குற்றவியல் சட்டங்கள், தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நியமனம் போன்ற சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை ஒன்றிய அரசு எளிதாக நிறைவேற்ற முடிந்தது. புதிய சட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு அசாதாரண அதிகாரங்களை வழங்குகின்றன. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு மிருகத்தனமான பெரும்பான்மை இருப்பதால், ஒரு கட்சியின் அல்லது ஒரு தலைவரின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதை நோக்கி நமது நாடு நகர்கிறது. இது அரசியலமைப்பு கட்டுபாட்டு மற்றும் நடுநிலைகளின் செயல்திறனைக் குறைக்கிறது. புதிய குற்றவியல் சட்டவிதிகள் அமலாக்க அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் ஒன்றினைதல் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை குடிமக்கள் எதிர்கொள்ளலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நிர்வாகத்தில் சமரசம் செய்யப்பட்டால், அதன் பாரபட்சமற்ற தன்மை சந்தேகத்திற்குரியதாக மாறிவிடும். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வேட்பாளர்கள் தங்களது அரசியல் ஈடுபாடுகளில் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும். தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை இல்லாத முறை, தேர்தல் நிதிக்கான நடுநிலையை சிதைத்துவிட்டது. பிரதான ஊடகங்கள் ஏற்கனவே சமரசம் செய்யப்பட்டுள்ளன. புதிய தணிக்கைச் சட்டங்கள் சுதந்திரமான பத்திரிகையை மேலும் ஒடுக்குவதற்கு அல்லது தகவல்களைத் திரிப்பதற்கு வழிவகுக்கும். மத சிறுபான்மையினரை குறிவைக்கும் மிகை தேசியவாத பேச்சும், பிளவுபடுத்தும் வார்த்தைகளும் சமூகத்தில் பிரிவினைக்கும்,  பன்மைத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையின் நிலையான சீரழிவுக்கும் வழிவகுக்கிறது.  "ஒரு தேசம், ஒரு மொழி மற்றும் ஒரு கலாச்சாரம்" நோக்கிய நகர்வு இந்தியாவை ஒரு சுதந்திரமற்ற ஜனநாயக நாடாக மாற்றுகிறது. உலகத் தலைவராக வருவதற்கான நமது வேட்கையை சேதப்படுத்துகிறது.  நமது தேசத்தில் நீதியும்  ஜனநாயகமும் இல்லாமல், உலகளாவிய தலைமைக்கான நமது வேட்கை பலிக்காது.

"ராமர் கோவில் திறப்பு விழாவை அரசியலாக்க கூடாது, ஆதரவளிக்க கூடாது, பிரிவினைக்கு பயன்படுத்தக்கூடாது"

 ராமர் கோவில் திறப்பு விழா அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகவும், தேர்தல் பலன்களை அறுவடை செய்வதற்கான ஒரு கருவியாகவும் மாறுவது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கவலை தெரிவிக்கிறது.  சுருங்கச் சொன்னால், இந்நிகழ்வை அரசியலாக்க கூடாது. அதற்கு ஆதரவளிக்க கூடாது, மக்களை பிளவுப்படுத்த பயன்படுத்தக் கூடாது. அரசியல்வாதிகளால் மதத்தை எப்படி தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு அப்பட்டமான எடுத்துக்காட்டாக ராமர் கோவில் திறப்பு விழா மாறிவிட்டது. முன்னர் இது ஆளும் கட்சியால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் ஒரு அம்சமாக இருந்தாலும், தற்போது இதில் வெட்கமின்றி அதுவே ஈடுபடுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா பாஜகவின் தேர்தல் நிகழ்ச்சியாகவும், பிரதமருக்கான அரசியல் விளம்பர பேரணியாகவும் மாறிவிட்டது. கோவில் அறக்கட்டளையால் இந்த நிகழ்வை நேர்மையாக நிர்வகித்திருந்தால், விஷயங்கள் வேறுவிதமாக இருந்திருக்கும்.  அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஒதுக்கி நிற்க சொல்லியிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோவில் திறப்பு விழாவை அரசியல் பேச்சுக்கள், முழக்கங்கள், சுவரொட்டிகள் இல்லாமல், கண்டிப்பாக மதம் சார்ந்த ஒரு விழாவாக கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அப்படியானால், எந்த சர்ச்சையும் இருக்காது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ராமர் கோவில் திறப்பு விழாவை நமது சுதந்திர தினத்துடன் ஒப்பிட்டு கூறிய கருத்து விஷமத்தனமானது. இது "நாம் vs அவர்கள்" என்ற வாதத்தை முன்னிறுத்தி, மத அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் ஒரு தீயச் செயல். இத்தகைய பேச்சுக்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வன்மையாக கண்டிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது 'பதவிப் பிரமாணத்தை' உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது. "அலுவலகத்தின் கடமைகளை அச்சம் அல்லது தயவு, விருப்பம் அல்லது தீய எண்ணமின்றி, முறையாகவும் உண்மையாகவும் செய்ய வேண்டும் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும்" என அது கட்டளையிடுகிறது.

"தொலைத்தொடர்பு மசோதா 2023 நிறைவேற்றம்:  'கண்காணிப்புக்கு உள்ளான ஜனநாயகம்"

சமீபத்திய *தொலைத்தொடர்பு மசோதா 2023* நிறைவேற்றம் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. வணிக நலன்களுக்காக தனியுரிமை மற்றும் சிவில் உரிமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அனைத்து வகையான தகவல்தொடர்புகளையும் அணுகுவதற்கு இந்த சட்டம் அரசிற்கு முன்பு இல்லாத அளவிற்கு அதிகாரத்தை வழங்குகிறது.  மசோதாவால் வழங்கப்பட்ட இந்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களின் தாக்கங்கள் நம் நாட்டை கண்காணிப்பு உள்ளான ஜனநாயக நாடாக மாற்ற வழிவகுக்கும். குறிப்பாக, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் டிண்டர் போன்ற செயலிகளைக் கண்காணிப்பதன் மூலம், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிக்க அரசிற்கு வழங்கப்பட்ட அனுமதி மிகவும் ஆபத்தானது.

குறியீடு, செய்கை, உரை, படங்கள், ஒலி, காணொளி, தரவு, ஸ்ட்ரீம், நுண்ணறிவு அல்லது தொலைத்தொடர்பு மூலம் அனுப்பப்படும் எந்தவொரு தகவல்களும் தொலைதொடர்பு மசோதா 2023வில் செய்திகளின் பரந்த வரையறையில் அடங்கும்.  தகவல்தொடர்பு பற்றிய இந்த மேலோட்டமான விளக்கம், சட்ட அமலாக்க  அதிகாரிகளுக்கு தவறாகப் பயன்படுத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுக்கும். மேலும், தனிநபர் ரகசியத்திற்கான அடிப்படை உரிமையை மீறும் வகையில், செய்திகளை அனுப்புவதை குறுக்கிடவோ அல்லது குறிப்பிட்டு தெரிவுசெய்து தடுத்து வைக்கவோ மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது. 
பொதுப் பாதுகாப்புக்காக, மொபைல் நெட்வொர்க்குகளை கையகப்படுத்தவும், இடைநிறுத்தவும் அரசிற்கு இம்மசோதா அனுமதி அளிக்கிறது. பொறுப்பேற்கும் உறுதியான நெறிமுறைகள் இல்லாததால், இத்தகைய பெரும் அதிகாரங்களுடன் மத சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களை துன்புறுத்துவதற்காக இச்சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. நமது குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் புண்படுத்தும் பகுதிகளை அகற்றிய பின்னரே இந்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அரசை கேட்டுக்கொள்கிறது.

"காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000ஐ நெருங்கியது"

தாக்குதல் தொடங்கி இரண்டரை மாதங்களில் காஸா பகுதியில் 20,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மீண்டும் வன்மையாக கண்டிக்கிறது.  இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி குண்டுவீச்சால் முற்றுகையிடப்பட்ட பகுதியில் அதிக உயிர் பலியும், அழிவும் ஏற்பட்டுள்ளது. அனைத்து சர்வதேச போர்ச் சட்டங்களில் உள்ள மனித உரிமைகளை மீறும் மோசமான நிலையை அது அடைந்துள்ளது. நிராயுதபாணியான சாதாரண குடிமக்கள், குறிப்பாக அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது கண்மூடித்தனமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறுகிறது..மேலும்  பல மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்கின்றன. இந்த இன படுகொலைக்கு சர்வதேச சமூகம் ஊமைப் பார்வையாளனாக இருக்கிறது. காசா மீதான இஸ்ரேலியப் போர் சியோனிஸ்டுகள், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் தீய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.  இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் காட்டிய வீரமும், அவர்கள் வெளிப்படுத்திய அசாதாரண பொறுமையும் மிகவும் பாராட்டுக்குரியது.  இஸ்ரேலால் நடத்தப்படும் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மீண்டும் வன்மையாக கண்டனம் தெரிவிப்பதுடன், இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து நிரந்தர போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்துமாறு சர்வதேச சமூகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.  சர்வதேச சமூகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பாலஸ்தீன பிரச்சினைக்கு நியாயமான தீர்வை பெற்று சுதந்திர பலஸ்தீன அரசை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளியீடு:
கே.கே.  சுஹைல்
தேசிய செயலாளர்- ஊடகத்துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்.
அலைப்பேசி : 7290010191
முகவரி: D-321, அபுல் ஃபஸ்ல் என்கிளேவ், ஜாமியா நகர், ஓக்லா,
 புது தில்லி - 110025