News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிகை அறிக்கை

12 ஜூன் 2026

அமெரிக்கத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்க்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் கடுமையாகக் கண்டனம்

 தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் பதிலளிக்க வேண்டும் எனக் கோரி,
வலுவான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசுக்கு வலியுறுத்தல்

புதுதில்லி: 
ஓமான் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த Settebello என்ற வணிக எண்ணெய்க் கப்பலின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய கடலோடிகள் உயிரிழந்த சம்பவத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தேசியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி கடுமையாகக் கண்டித்துள்ளார். 

அண்மைக் காலங்களில் இந்திய பணியாளர்கள் பயணித்த மூன்றாவது கப்பல் அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பாவி உயிர்கள் பலியான இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திய சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி, 
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த கடினமான சூழலை எதிர்கொள்ள அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையையும் மன உறுதியையும் வழங்கிட பிரார்த்தனை செய்தார்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து அவர் கூறியதாவது:
“பொதுமக்கள் பயணிக்கும் ஒரு வணிகக் கப்பலை இலக்காகக் கொண்டு தாக்கி, இந்தியப் பிரஜைகள் உயிரிழந்த சம்பவத்தை ‘துணைச் சேதம்’ (Collateral Damage) எனக் கூறி அலட்சியப்படுத்த முடியாது.

 சர்வதேச வணிகக் கடற்பாதைகள் உலகின் அத்தியாவசிய உயிர்நாடிகளாகும். அவற்றில் பணிபுரியும் பொதுமக்கள் எந்தவொரு இராணுவ நடவடிக்கையாலும் ஆபத்துக்குள்ளாக்கப்படக் கூடாது. 

இத்தகைய நடவடிக்கைகள் மனிதாபிமானக் கோட்பாடுகளின் கடுமையான மீறலாகும். மேலும், அவை சர்வதேச நெறிமுறைகளைப் பலவீனப்படுத்தி, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

“அமெரிக்க இராணுவத்தின் பொறுப்பற்ற தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
 எந்தவொரு இராணுவ அல்லது அரசியல் நோக்கமும் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

மேலும், 
சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”
இவ்விவகாரத்தில் இந்திய அரசு உறுதியான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 இந்தத் தாக்குதல் மற்றும் இந்தியப் பிரஜைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்காவிடம் இந்திய அரசு கடுமையான ராஜதந்திர எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
 அவர்களின் சார்ந்திருப்போருக்கு உடனடி நிதியுதவி, வேலைவாய்ப்பு ஆதரவு மற்றும் தேவையான அனைத்து நிவாரண, மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி, 
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தையும், நாடுகளின் நடத்தை தொடர்பான உலகளாவிய ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளையும் வெளிப்படையாக மீறுவதாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால், பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதுடன், பொதுமக்களின் உயிர்கள் ஆபத்துக்குள்ளாகும்
சர்வதேச வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்படும்; உலக அமைதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை கடுமையாக சீர்குலையும் என்றும் அவர் எச்சரித்தார்.

பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவும், 
மனித உயிர்களின் புனிதத்தன்மையையும் சர்வதேச சட்டத்தின் மேன்மையையும் பாதுகாக்கவும், சர்வதேச சமூகமும் இந்திய அரசும் இந்த மோதலில் பயனுள்ள தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் அழைப்பு விடுத்தார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புதுதில்லி