News Channel

பத்திரிக்கை அறிக்கை

04 ஜூன் 2026

பத்திரிக்கை செய்தி

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் இன்ஜினியர் இரங்கல்:
பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் வலுவாக அமல்படுத்தவும், தீ விபத்துக்கு பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்

புது டெல்லி:
டெல்லி மலவியா நகரில் அமைந்துள்ள ஹோட்டலில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் வெளிநாட்டினர்கள் உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் இன்ஜினியர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
பாதிக்கப்பட்டவர்களுக்கு மனவலிமையையும் பொறுமையையும் வழங்கிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவும் வாழ்த்துகிறேன்.

இந்த துயரகரமான சம்பவம் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் அவற்றை அமல்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள கடுமையான அலட்சியத்தின் விளைவாகும். அடிப்படை தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான விருந்தினர்களைத் தங்க வைப்பதற்காக அறைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதும், பொது இடங்களிலும் வணிக நிறுவனங்களிலும் பாதுகாப்பு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவதில் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்வியையும் மோசமான ஆளுகையையும் வெளிப்படுத்துகின்றன.

“இத்தகைய அலட்சியங்கள், குறிப்பாக மக்கள் நெருக்கமாக வாழும் நகர்ப்புற பகுதிகளில், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் வருகை தருவோர் உள்ளிட்ட சாதாரண மக்களின் உயிர்களை கடுமையான ஆபத்துக்கு உள்ளாக்குகின்றன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அவசியமானவையாகவும் பாராட்டத்தக்கவையாகவும் இருந்தாலும், நீண்டகால தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது மிகுந்த அவசியமாகும். இதுபோன்ற நிறுவனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதோடு, அவற்றை மீறுவோருக்கு எதிராக தெளிவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுமிக்க நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் நகர்ப்புற வளர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும். மனித உயிர்களைப் பாதுகாப்பதே அனைத்து வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளிலும் முதன்மையான முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், இத்தகைய துயரச் சம்பவங்கள் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்க வேண்டும்.”

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
தலைமையகம்