News Channel

கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் இரங்கல்

புதுடெல்லி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைவர் சையத் சாதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள், இந்தியாவிற்கான கத்தார் நாட்டுத் தூதர் முஹம்மது ஹசன் ஜாபிர் அல் ஜாஸிர் அவர்களை இன்று கத்தார் தூதரகத்தில் சந்தித்தார். கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் மறைவையொட்டி ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தார். ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்கள் கத்தார் நாட்டின் வளர்ச்சிக்கும், உலக முஸ்லிம் சமுதாயத்தின் (உம்மத்தின்) நலன்களுக்கும், குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு அரசியல், மனிதாபிமான மற்றும் மறுசீரமைப்பு உதவிகளை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர் என்றும், இந்தியா–கத்தார் இருதரப்பு உறவுகளைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற தலைவராகவும் திகழ்ந்தார் என்றும் தெரிவித்தார். அவரது சிறப்பான சேவைகள் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கும், கத்தார் அமீருக்கும், கத்தார் அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அவர், “அல்லாஹ் மறைந்தவரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, தனது விசாலமான அருளில் அவருக்கு உயர்ந்த இடத்தை வழங்கி, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பொறுமையையும் ஆறுதலையும் அருள்வானாக” என்று பிரார்த்தனை செய்தார். இந்தியாவிற்கான கத்தார் நாட்டுத் தூதர் முஹம்மது ஹசன் ஜாபிர் அல் ஜாஸிர் அவர்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவரின் நேரில் வருகைக்கும், இரங்கல் தெரிவித்ததற்கும், பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்தியா மற்றும் கத்தார் மக்களுக்கிடையேயான நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைப் பொதுச் செயலாளர் சையத் முஹியுத்தீன் ஷாகிர் மற்றும் உதவி செயலாளர் டாக்டர் ரிஸ்வான் ரஃபீகி ஆகியோரும் உடனிருந்தனர்.