News Channel

பத்திரிக்கை அறிக்கை



22.07.2026

முகம்மத் அலி ஜவ்ஹர் பல்கலைக்கழக இடிப்பு நடவடிக்கைக்கு உடனடி தடை கோரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோரிக்கை: மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஆளுநரிடம் மனு சமர்ப்பிப்பு!

பல்கலைக்கழகத்திற்கு JIH தூதுக்குழு வருகை; இடிப்பு உத்தரவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்.

ராம்பூர்:
ராம்பூர் வளர்ச்சி அதிகார அமைப்பு (RDA) பிறப்பித்துள்ள இடிப்பு உத்தரவையடுத்து, ராம்பூரில் உள்ள மெளலானா முஹம்மத் அலி ஜவ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அமைப்பின் தூதுக்குழு நேரில் வருகை தந்தது. பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தனது முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும் அக்குழு தெரிவித்தது.


மேலும், பல்கலைக்கழக நிர்வாகம், சமூகத் தலைவர்கள் மற்றும் ஆசம் கானின் குடும்பத்தினரைச் சந்தித்த அக்குழுவினர், உத்தரப் பிரதேச மாநில ஆளுநருக்கு முகவரியிடப்பட்ட கோரிக்கை மனுவை ராம்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்தவித இடிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் உத்தரப் பிரதேச அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தியுள்ளது.

 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்:

 1. இடிப்பு நடவடிக்கைக்கு உடனடித் தடை:
   பல்கலைக்கழகத்தின் 38 கட்டடங்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இடிப்பு உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட வேண்டும். ஜூலை 30, 2026 கெடு நெருங்கி வரும் நிலையில், வளாகத்திற்குள் நடத்தப்படும் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மாணவர் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 2. ஆளுநரின் தலையீடு:
   ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், இந்த நிறுவனத்தின் அரசியல் சாசனப் பண்பைப் பேணவும் மாண்புமிகு ஆளுநர் உடனடியாகத் தலையிடக் கோரி, மாவட்ட ஆட்சியர் வழியாக மனு அளிக்கப்பட்டு உள்ளது.

 3. நீதிமன்ற விசாரணை:
   இடிப்பு உத்தரவின் செல்லுபடித் தன்மை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் எழுப்பியுள்ள அதிகார வரம்பு தொடர்பான கேள்விகளை உரிய நீதித்துறை விசாரணை மூலம் தீர்த்துவைக்க, இந்த விவகாரத்தை உடனடியாகத் தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டும் என JIH வலியுறுத்தியுள்ளது.


பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய, கட்டணச் சலுகை பெறும் பல மாணவர்கள் உட்பட சுமார் 3,000 மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலையைத் தூதுக்குழு வெளியிட்டது. 

பல்கலைக்கழகத்தின் 40 கட்டடங்களில் 38 கட்டடங்களை இடிப்பது என்பது, அந்த நிறுவனத்தையே முற்றிலுமாக அழிப்பதற்குச் சமம் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 30-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு முக்கியக் கல்வி மையத்தை மாணவர் சமூகத்திடமிருந்து பறிப்பதாகும் என்றும் அக்குழு கவலை தெரிவித்தது.

சமூகத்திற்குச் சிறப்பான கல்விச் சேவையை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய தூதுக்குழு, இந்த இடிப்பு நடவடிக்கை ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

இது குறித்துத் தூதுக்குழுவினர் தெரிவிக்கையில்:

> "நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் மாணவர்களுடனும் உறுதியாக நிற்கிறோம். இது வெறுமனே கட்டடங்கள் பற்றிய பிரச்சினை அல்ல; இது மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் அவர்களின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினை. இடிப்பு நடவடிக்கைக்கு மாற்றாக, கட்டடங்களை முறைப்படுத்துவது (regularisation) குறித்த சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். நிர்வாக நடவடிக்கைகளால் எந்தவொரு மாணவரின் கல்வியும் பாதிக்கப்படக் கூடாது," என்று கூறினர்.

தூதுக்குழுவில் இடம்பெற்ற தலைவர்கள்:

 மெளலானா முஹம்மத் ஷஃபி மதனி (தேசியச் செயலாளர், JIH)

 முஹம்மத் அஹமத் (தேசியச் செயலாளர், JIH)

  இனாம் உர் ரஹ்மான் (உதவிச் செயலாளர், JIH)

  மெளலானா ஜமீர் உல் ஹஸன் ஃபலாஹி (மாநிலத் தலைவர், JIH மேற்கு உத்தரப் பிரதேசம்)

  மெளலானா அப்துஸ்ஸலாம் பஸ்தவி (தலைவர், JIH ராம்பூர்)

 சையத் கலீக் அஹ்மத் (மூத்த பத்திரிகையாளர்)

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது டெல்லி.