News Channel

ஹிதாயா அரபிக் கல்லூரி சார்பில் பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை, ஜூலை 11, 2026: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், சென்னை மெட்ரோவின் கீழ் இயங்கி வரும் ஹிதாயா அரபிக் கல்லூரி சார்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி விருது வழங்கும் விழா இன்று (11.07.2026, சனிக்கிழமை) சென்னை மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநகரத் தலைவர் ஜனாப் நசீர் அத்தாவுல்லா அவர்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய செயலாளர் சகோதரி ராபியா பஸ்ரி அவர்கள் மற்றும் சென்னை மெட்ரோ எஜுகேஷனல் டிரஸ்டின் அறங்காவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பங்கேற்று, மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம், ஆளுமை மேம்பாடு, உயர்கல்வி இலக்குகள் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து ஊக்கமூட்டும் சிறப்புரைகளை வழங்கினர். மேலும், ஹிதாயா அரபிக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று முதல் பரிசுகளை வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்ததற்காக அவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பெருமளவில் பங்கேற்றனர். 450-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவித்து, எதிர்காலச் சமூகத்தின் பொறுப்புமிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.