06 மே 2026
#தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் பிந்தைய வன்முறைகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கவலை- மற்றும் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க அரசுக்கு வலியுறுத்தல்.
நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகள் குறித்தும் ஜமாஅத் கவலை வெளியிட்டுள்ளது.
புது தில்லி:
தேர்தல் நடத்தப்பட்ட விதம், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிந்தைய வன்முறைகள், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பொதுமக்களின் பெரும் பகுதியை பாதித்து வரும் வெப்ப அலை போன்ற சமீபத்திய அரசியல் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைமை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஜமாஅத்தின் மாதாந்திர செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன்
துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசினார்.
சில மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்க உள்ள நிலையிலும், சில மாநிலங்களில் மீண்டும் அதே அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அனைத்து அரசாங்கங்களும் உள்ளடக்கிய, பொறுப்புணர்வு மிக்க மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.
பொருளாதார நெருக்கடி,
வேலையின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கல்வி மற்றும் சமூக நீதி தொடர்பான சவால்களை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், வெறும் அடையாள நடவடிக்கைகளை விடுத்து, அரசு உடனடியாக ஆக்கப்பூர்வமான கவனத்தைச் செலுத்த வேண்டும்.
மேலும்,
மேற்கு வங்கத்தில் உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு வங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம், விளிம்புநிலை மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் மற்றும் நிர்வாக இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்கள் குறித்து மலிக் முஹ்தசிம் கான் கவலை தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது பயன்படுத்தப்பட்ட துருவமுனைப்பு (Polarising) அரசியல், ஜனநாயகச் சூழலைக் கெடுத்துள்ளதோடு, தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்தும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பண பலம் மற்றும் பிளவுபடுத்தும் பேச்சுகள் பயன்படுத்தப்பட்டது குறித்தும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய ஜமாஅத்தின் மற்றொரு
துணைத் தலைவர்
பொறியாளர் முஹம்மது சலீம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிச் சுமை குறித்து கவலை தெரிவித்தார்.
சமையல் எரிவாயு (LPG), எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு ஆகியவை போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாகவும், இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாங்கும் சக்தியைப் வெகுவாகப் பாதித்துள்ளது.
எரிபொருள் மீதான கலால் வரி மற்றும் வாட் (VAT) வரியைக் குறைப்பதன் மூலம் விலையை நிலைப்படுத்த வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் வெப்ப அலை பாதிப்புகள் குறித்துப் பேசிய
பொறியாளர் முஹம்மது சலீம்
காடழிப்பு மற்றும் முறைப்படுத்தப்படாத நகரமயமாக்கல் காரணமாகவே வெப்ப அலையின் தீவிரம் அதிகரித்துள்ளது.
வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளைப் பாதுகாக்க உடனடி 'வெப்ப விழிப்புணர்வு திட்டங்களை' (Heat Action Plans) அமல்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் வசதி, வேலை நேரக் கட்டுப்பாடு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம், புது தில்லி.