News Channel

"பத்திரிக்கை அறிக்கை"

"பத்திரிக்கை அறிக்கை"

01 நவம்பர் 2025

"பீஹார் சட்டசபைத் தேர்தல்கள்"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) 
பீஹார் மக்களை 
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் அதிகளவில் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக உரிமையை அறிவுடனும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறது. 

வாக்குப்பதிவு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல; ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நீதியுடனும் அமைதியுடனும் வளர்ச்சியுடனும் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கவும் அது ஒரு புனித கடமையாகும்.

வாக்காளர்கள் அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் 
ஓரிரு உணர்ச்சிமயமான, 
பிரிவினைவாத அல்லது மதவாத அழைப்புகளை அடிப்படையாக அல்லாது, 

அவர்களின் காட்சி, 
செயல்திறன், 
நேர்மை மற்றும் வறுமை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், நீதி போன்ற மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
அனைத்து அரசியல் கட்சிகளையும் அர்த்தமுள்ள மற்றும் கட்டுப்பாடான அரசியல் உரையாடலை நடத்துமாறு வலியுறுத்துகிறது. 

தேர்தல் பிரசாரங்கள் 
பொதுநலன், கொள்கைகள் மற்றும் வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும்.
வெறுப்புரை, 
சமூக விரிசல், 
மதப் பிளவு அல்லது தனிப்பட்ட தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது. 
பண பலம் அல்லது அரசு இயந்திரங்களின் தவறான பயன்பாடு ஜனநாயகத்தை கடுமையாக பாதிக்கும் மற்றும் மக்களின் நம்பிக்கையை அழிக்கும்.

தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 
நெறிமுறைகள் மீறப்பட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேண்டுகிறது.

பீஹார் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றில் பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. 
இந்த மரபை காப்பாற்றி, மக்கள் பிரிவினைவாத அரசியலை மீறி ஒன்றுபட்ட வளர்ச்சி, நீதி மற்றும் அமைதி பயக்கும் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வெளிப்படுத்துகிறது.

------------------------------------------------------------------------------------

"பெண்கள் மீது நடைபெறும் குற்றச்செயல்களின் அதிகரிப்பு"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலையும் வேதனையும் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டம், பால்‌டன் பகுதியில் பணியாற்றிய ஒரு பெண் அரசு மருத்துவர், போலீஸ் அதிகாரி மற்றும் இன்னொருவர் பல நாட்களாக பாலியல் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்தது மிகவும் மனக்குமுறலை ஏற்படுத்தும் சம்பவமாகும்.

மேலும் 
தில்லியில் ஒரு மருத்துவமனை ஊழியர், சமூக வலைத்தளத்தில் ராணுவ வீரர் என போலி அடையாளம் காட்டிய ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது டிஜிட்டல் ஏமாற்று செயல்கள் பெண்களை எவ்வாறு இலக்காக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும், 
தில்லியிலேயே, 18 வயது எம்.பி.பி.எஸ் மாணவி, நண்பர் ஒருவர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்த சம்பவம், நகர்ப்புற சூழலில் நம்பிக்கை, தொழில்நுட்பம், மற்றும் நட்பின் தவறான பயன்படுத்துதல் பெண்கள் மீது எத்தகைய ஆபத்தை உருவாக்குகிறது என்பதை காட்டுகிறது.

இவை தனித்தனியான சம்பவங்கள் அல்ல; பெண்கள் எங்கு இருந்தாலும் — கல்வியிலும், பணிபுரியும் இடங்களிலும்,
வீடுகளிலும் — பாதுகாப்பின்மையின் தொடர்ச்சியான நிலையைக் குறிக்கின்றன.

தேசிய குற்றப் பதிவுகள் (NCRB) 2023 அறிக்கை காட்டுவது போல, 
இந்தியாவில் பெண்கள் மீது நடந்த குற்றங்கள் 4,48,211 ஆக உயர்ந்துள்ளது. இது சட்டம், ஒழுங்கு மற்றும் சமூகவாழ்வு தளர்ச்சி அடைந்து வருவதைக் காட்டுகிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் JIH 
மத்திய மற்றும் மாநில அரசுகளை:
வழக்குகளின் விரைவான விசாரணை
பாதிக்கப்பட்டவரை மையமாகக் கொண்ட நீதிமுறை நடைமுறை
காவல்துறை, நீதித்துறை மற்றும் 
சுகாதாரத் துறையினருக்கான 
உணர்வு சார்ந்த பயிற்சி
வழங்குமாறு வலியுறுத்துகிறது.

சட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல! சமூகத்தின் நெறி, 
மனிதநேயம் மற்றும் இறையச்சம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். 
இறைவனின் பயமும் மறுமையின் பொறுப்புணர்வும் மனதில் உறுதியாகவில்லை என்றால், 
பெண்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

__________________

" CAA போராட்டக் கைதிகள் பிரச்சினை"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) 
2020 டெல்லி கலவரக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், ஐந்து ஆண்டுகள் ஆனபோதும் சரியான விசாரணை கூட தொடங்காத நிலையில் தொடர்ந்துக் கைது நிலையில் வைக்கப்பட்டிருப்பதற்கு கடும் கவலை மற்றும் ஏமாற்றத்தை தெரிவிக்கிறது.

நீதிமன்ற விசாரணை தொடங்காத நீண்டகால முன்கைது என்பது 
“ஜேல் விதி, ஜாமின் விதிவிலக்கு” என்ற சட்ட அடிப்படை கொள்கைக்கு புறம்பானது.

அதேநேரத்தில், UAPA போன்ற அதிகக் கடுமையான சட்டங்களை அமைதியான போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்துவது மிகவும் கவலைக்குரியது.

ஒரு WhatsApp குழுவில் இருப்பது, கருத்துரைகள் பகிர்ந்தது, 
அல்லது போராட்டத்தை ஒருங்கிணைத்தது போன்ற செயல்களை பயங்கரவாத சதியாக கருதுவது விமர்சன சுதந்திரத்தையே குற்றமாக்குவதற்கு சமம்.

மேலும் சிலர் ஜாமினில் வெளியேறிய நிலையில் மற்றவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள் என்பது நீதியின் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை முன்னுரிமையாக எடுத்துக்கொண்டு நியாயமும் அரசியல் சாயமற்ற விசாரணையும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது.

வெளியீடு:
சல்மான் அஹ்மத் 
தேசிய ஊடக செயளாலர் 
தலைமையகம் 
புதுடெல்லி.