இந்தியாவின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புறக்கணிக்க முடியாது
டெல்லியில் நடைபெற்ற இந்திய முஸ்லிம் வரலாறு குறித்த மாநாட்டில்
சையத் சஆதாத்துல்லாஹ் ஹுசைனி,
சசி தரூர், மனோஜ் ஜா உள்ளிட்ட அறிஞர்கள் உரை.
புது தில்லி: "இந்திய வரலாற்று மன்றத்தின்" (Indian History Forum) கீழ், இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் இரண்டு நாள் பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது.
"இந்தியாவின் வரலாறு,
சமூகம் மற்றும் நாகரிகத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பை மறுபரிசீலனை செய்தல்" என்ற முக்கிய கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின் முதல் நாளில்,
சசி தரூர் (மக்களவை உறுப்பினர்),
சையத் சஆதாத்துல்லாஹ் ஹுசைனி (தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்), குர்தீப் சிங் சப்பல் (இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்), முகமது அதீப் (முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்), மனோஜ் குமார் ஜா (மாநிலங்களவை உறுப்பினர்), அசோக் குமார் பாண்டே (எழுத்தாளர்), டாக்டர் ஷதாப் மூசா (ஒருங்கிணைப்பாளர், இந்திய வரலாற்று மன்றம்) மற்றும் பல அறிஞர்களும் முக்கிய ஆளுமைகளும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சசி தரூர் பேசுகையில், "நமது வரலாற்றில் பல விஷயங்கள் உள்ளன.
அதே சமயம், தவறான மற்றும் யதார்த்தத்திற்குப் புறம்பான பல கதையாடல்களை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகைய சூழலில், வரலாற்றின் சரியான உண்மைகளைப் புரிந்துகொண்டு, உண்மையைச் சென்றடைந்து, அதனைச் சமூகத்தின் முன் வைப்பது மிகவும் அவசியமாகும் என்றார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர்
சையத் சஆதாத்துல்லாஹ் ஹுசைனி கூறுகையில்,
வரலாறு என்பது எந்தவொரு தேசத்திற்கும் நாட்டிற்கும் மிக முக்கியமானது என்றார்.
வரலாறு என்பது வெறும் தகவல் மட்டுமல்ல,
அது எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான அடிப்படையாகும்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் தொடர்பான வரலாற்றின் முக்கியப் பகுதியை நாடு மறந்துவிடக் கூடாது
அதேபோல், கூட்டு மறதிக்கு ஆளாகவோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் வரலாற்றுப் புரிதலை வடிவமைக்கவோ அனுமதிக்கக் கூடாது.
இத்தகைய மாநாடுகளும் நிகழ்ச்சிகளும் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமானவை. இன்று வரலாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழ்நிலையில், முஸ்லிம்களும் நீதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் முன்வந்து,
உலகின் முன் வரலாற்றின் சரியான உண்மைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா பேசுகையில், "இன்று வரலாற்றை மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன
இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
நமது வரலாறு நமது பாரம்பரியம், அதைப் பாதுகாப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்றார்.
குர்தீப் சிங் சப்பல் குறிப்பிடுகையில்,
வரலாற்றை மாற்றும் முயற்சிகள் நாட்டில் கவலையளிக்கும் நிலையை எட்டியுள்ளன என்றார்.
முகமது அதீப் கூறுகையில்
ஒரு நாகரிகத்தை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் போது அதன் வரலாறு மாற்றப்படுகிறது
இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது
இது நமது அடையாளத்திற்கே அச்சுறுத்தலாக அமையலாம் என்று எச்சரித்தார்.
இந்த மாநாட்டின் போது, பொருளாதாரம், வர்த்தகம், சமூகவியல் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை விளக்கி வரலாற்றாசிரியர்களும் நிபுணர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
மேலும்,
முஸ்லிம் பெண்களின் வரலாற்றுப் பங்கு குறித்து ஒரு சிறப்பு அமர்வும் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அறிஞர்கள், அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.
வரலாற்றின் துல்லியமான உண்மைகளை வடிவமைப்பதில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாகவும், அதன் மூலம் தேசம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுவதாகவும் பங்கேற்பாளர்கள் உறுதி பூண்டனர்.