News Channel

பத்திரிக்கை அறிக்கை

கமால் மௌலா மசூதி தீர்ப்பு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி கடும் கவலை; நீதித்துறை நடவடிக்கைகளில் நேர்மையும் புறநிலையும் அவசியம் என வலியுறுத்தல்.

புதுடெல்லி:
 மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கமால் மௌலா மசூதியை ஒரு கோவில் என்று அறிவித்து வழங்கிய சமீபத்திய தீர்ப்பு குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். 

இத்தீர்ப்பு நீதித்துறை அமைப்பின் நம்பகத்தன்மை, சிறுபான்மையினரின் உரிமைகள், மத சுதந்திரம், வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பு ஆகியவற்றில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக இந்தத் தீர்ப்பு முக்கியமான அரசியலமைப்பு கேள்விகளை எழுப்புகிறது. 

பல தசாப்தங்களாக, போஜ்சாலா வளாகம் இரு சமூகத்தினரும் அவரவர் மத வழிபாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக ஒரு உடன்படிக்கையின் கீழ் இயங்கி வந்தது. 

ஒரு சமூகத்தின் நிலைநாட்டப்பட்ட வழிபாட்டு உரிமைகளை அகற்றிவிட்டு, மற்றொரு சமூகத்திற்கு சாதகமாக செயல்படுவது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த ஒரு ஏற்பாட்டைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து மதங்களுக்குமான சமமான மரியாதை என்ற கொள்கையையும் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. 
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் இத்தகைய நகர்வுகள் மிகவும் எச்சரிக்கையுடனும், சமநிலையுடனும் அணுகப்பட வேண்டும்."

"முஸ்லிம் சமூகத்திற்கு அவர்களின் வழிபாட்டுத் தலத்திற்குப் பதிலாக மாற்று நிலம் ஒதுக்குவது என்ற பரிந்துரை கவலையளிக்கிறது. மத உரிமைகள் என்பது வெறும் இடவசதி அல்லது இடமாற்றம் சார்ந்த விஷயம் அல்ல; வழிபாட்டுத் தலங்கள் வரலாற்றுத் தொடர்ச்சி, அடையாளம் மற்றும் கூட்டு நினைவுகளுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. 

வரலாற்று ரீதியாகப் பகிரப்பட்ட அல்லது சர்ச்சைக்குரிய ஒரு இடத்திலிருந்து ஒரு சமூகத்தை வெளியேற்றுவது போன்ற அணுகுமுறை, அநீதி இழைக்கப்பட்ட உணர்வையும் அந்நியப்படுதலையும் உருவாக்கும். இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களில் சர்ச்சைக்குரிய வரலாற்று மற்றும் தொல்பொருள் விளக்கங்களைச் சார்ந்து தீர்ப்பளிப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். 
இத்தகைய அணுகுமுறைகள் ஒரு தரப்பின் வாதங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்."

 "சுதந்திரத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் இருந்த நிலையிலேயே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற 'வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991'-ஐப் புறக்கணித்துவிட்டு, மதத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை மீண்டும் கிளப்பும் ஒரு பரந்த போக்கின் பகுதியாகவே இந்த வழக்கைப் பார்க்க வேண்டியுள்ளது. 

வரலாற்றுச் சர்ச்சைகள் மீண்டும் உருவாவதைத் தடுக்க 1991-ஆம் ஆண்டு சட்டம் அதன் முழுமையான அர்த்தத்தில் நிலைநாட்டப்பட வேண்டும். இக்கொள்கையில் ஏற்படும் எந்தவொரு தளர்வும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்கும் சமூக ஸ்திரத்தன்மைக்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். 

இந்த விவகாரம் அரசியலமைப்பு நெறிமுறைகள், நேர்மை மற்றும் அனைத்து சமூகங்களுக்குமான நீதியின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும். நீதித்துறை தனது செயல்பாடுகளில் நடுநிலையாக இருப்பதுடன், அது நடுநிலையாகச் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் உருவாக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய நிகழ்வுகள் அதற்கு நேர்மாறான ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. 

இது இந்த முக்கிய நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை, கண்ணியம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம், மேல்முறையீடு உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ தீர்வுகளையும் நாடும். 
இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்துக் கவலைகளும் முறையாகக் கேட்கப்பட்டு தீர்க்கப்படும். அனைத்து குடிமக்களின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது தேசத்தின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற பண்புகளைப் பேணுவதற்கு அவசியமானது."
என்று குறிப்பிட்டார்.