ஜமாஅத்தே இஸ்லாமஹிந்த்
மாதாந்திர செய்தியாளர்கள் சந்திப்பு
7 டிசம்பர், சனிக்கிழமை
வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் அமலாக்க சட்டம் (1991):
வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991, ஆகஸ்ட் 15, 1947 இல் அனைத்து மதத் தலங்களின் தற்போதைய நிலையை உறுதி செய்வதன் மூலம் வகுப்புவாத பதட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
இந்த முக்கியமான சட்டம், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்கான வரலாற்று உரிமைகள் மீதான சர்ச்சைகளில் ஏற்படும் பல்வேறு மதப்பூசல்களைத் தடுக்கவும் உருவாக்கப்பட்டது. சட்டத்தின் தெளிவான ஏற்பாடுகள் இருந்தபோதிலும்,
மசூதிகள், ஆலயங்கள், மற்றும் பிற மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பாக தவறான, ஆதாரமற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கூற்றுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுவதை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம்.
முக்கியமாக முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் மீதான இந்த பொய்யான கூற்றுகள் பெரும்பாலும் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றன.
இவை யாவும் ஒரே நோக்கத்துடன் சமூகங்களை மத அடிப்படையில் பிரிவினைப்படுத்தல், மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான வெறுப்பு மற்றும் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இந்த இட்டுக்கட்டப்பட்ட கூற்றுகள் நீதிமன்றங்களில் மனுக்களாக தாக்கல் செய்யப்படுகின்றன, மேலும் இந்த மாதிரியான தீய நோக்கங்களைக் கொண்ட மனுக்களை சில சமயங்களில் நீதிமன்றங்கள் நிராகரிப்பதற்குப் பதிலாக முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை சர்வே செய்தல் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குகின்றன. இது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் முக்கிய நோக்கத்தையே சீர்குலைக்கிறது, மேலும் தேவையற்ற சச்சரவுகள், வகுப்புவாத அமைதியின்மை மற்றும் வன்முறைக்கு கூட வழிவகுக்கிறது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்த சூழலை மிகுந்த கவலையுடன் நோக்குகிறது,
மேலும் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை, அதை இயற்றியதன் நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோருகிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான இத்தகைய மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரிக்க வேண்டும். உண்மையில், இதுபோன்ற மறைமுக அரசியல் நோக்குடன், மற்றும் தீய அரசியல் தந்திரத்துடனான மனுக்களை தாக்கல் செய்யும் நபர்களையும் அமைப்புகளையும் மிக அதிக அபராதம் விதிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கும் நோக்கில் நீதித்துறையின் (நேரம், அமர்வுகள் போன்ற) வளங்களை வீணடிக்கக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிப்பது, சமூகங்களுக்கிடையில் நிரந்தரப் பிளவை உருவாக்கி அராஜகத்திற்கு வழிவகுக்கும் உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் புற்றீசல் போல் கிளம்பும் அபாயம் உள்ளது.
வரலாற்றைத் தலைகீழாக மாற்றுவது அல்லது வாக்கு வங்கி அரசியலுக்காக உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளைத் தூண்டுவது அரசியலமைப்பில் உள்ள நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை சிதைக்கிறது.
பொதுமக்கள், அரசாங்கம் மற்றும் நீதித்துறை மத நல்லிணக்கத்தையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் பாதுகாக்க பாடுபட வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
"சம்பல் வன்முறை"
உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் உயிரை பறித்த போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வன்மையாக கண்டிக்கிறது.
அமைதியை நிலைநாட்ட போலீசார் பொறுப்புடன் செயல்பட வேண்டும், கலவரம் ஏற்படும்வண்ணம் செயல்படக்கூடாது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,
மேலும் சம்பல் மக்கள் அமைதியாக இருக்குமாறும், எதிர்வினையாற்றுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
காவல்துறையின் துப்பாக்கிச் சூடு குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோருகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய இதற்கு பொறுப்பானவர்களை கைது செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்டுள்ள வாழ்வு மற்றும் கண்ணியத்திற்கான உத்திரவாதமாக இருக்கும் அரசியலமைப்பு உரிமையை மீறும் அரச அடக்குமுறை, காவல்துறையின் பொறுப்பற்ற அதிகப்பிரசங்கித்தனம் மற்றும் அப்பட்டமான இனப்பாகுபாடுடன் கூடிய செயல்பாடு ஆகியவற்றை இந்த துயர சம்பவம் பிரதிபலிக்கிறது.
முதலாவதாக, மஸ்ஜித் கமிட்டியின் கருத்தை கேட்காமல், சம்பல் ஜும்மா மஸ்ஜிதில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருப்பது நீதித்துறையின் நேர்மையில் ஏற்பட்டுள்ள கடுமையான தவறை காட்டுகிறது.
மேலும், சர்வே குழுவுடன் ஆத்திரமூட்டும் சமூகவிரோதிகள் இருப்பதும், அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகளும் பதற்றத்தை அபாயகரமாக அதிகரித்து, அநியாயமான கொலைகளுக்கும், அப்பாவி உயிர்களின் நியாயமற்ற இழப்புகளுக்கும் வழிவகுத்தது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் சம்பலுக்கு வருவதைத் தடுப்பது குறித்தும் தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது.
அரசாங்கமும் உள்ளாட்சி நிர்வாகமும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், ஊடகங்களின் சோதனைகள் மற்றும் விசாரணைகள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும், காவல்துறை விசாரணைக்கும் அவர்கள் ஏன் பயப்படவேண்டும்?
காவல்துறையும் நிர்வாகமும் எதை மறைக்க முயல்கின்றன என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நிலைமையை மதிப்பிடுவதற்கும் அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும்.
தகவல்களை முடக்குவதன் மூலமும், அணுகலைத் தடுப்பதன் மூலமும், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை உறுதி செய்யும் பொறுப்பை உத்தரப்பிரதேச அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் தட்டிக்கழிக்கின்றன.
இந்த கடுமையான அநீதிக்கு எதிராக குரல் எழுப்புமாறு நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற அடக்குமுறை சம்பவங்களைத் தடுக்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், சம்பலில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
"சமூக ஆர்வலர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுதல்"
நாட்டில் சமூக ஆர்வலர்கள்,
மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வன்மையாகக் கண்டிக்கிறது.
நதீம் கான் மற்றும் முஹம்மத் ஜுபைர் மீதான சமீபத்திய துன்புறுத்தல், இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக சிவில் உரிமைகள் மிகமோசமான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் இது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதை அடக்கும் முயற்சியாகும்.
நதீம் கான் மற்றும் முஹம்மத் ஜுபைர் இருவரும் வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக அச்சமின்றி வாதிட்டதற்காக அறியப்பட்டவர்கள்.
வெறுப்பு பேச்சுக்கு எதிராகவும், வெறுப்பு குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கு ஆதரவாகவும் நதீம் கானின் சட்ட நடவடிக்கைகளும்; அல்லது வெறுக்கத்தக்க பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக ஜுபைரின் அயராத முயற்சியாக இருந்தாலும், அவர்களின் பணியும், அவர்களைப் போன்ற மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணியும் நமது பன்முக தன்மையுள்ள நாட்டின் சமூக கட்டமைப்பைப் பாதுகாப்பதில் முக்கியமானது.
போலீஸாரால் அவர்கள் குறிவைக்கப்பட்ட விதம், வெறுப்பு குற்றங்கள், அநீதிகள் மற்றும் அரசியலமைப்பு உரிமை மீறல்களை அம்பலப்படுத்துபவர்களின் குரல்களை நசுக்க அரசு தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது.
இந்த செயற்பாட்டாளர்களும் அவர்கள் வழிநடத்தும் அமைப்புகளும் விளிம்புநிலை சமூகங்களைப் பாதுகாப்பதிலும், வெறுப்புக் குற்றங்களை ஆவணப்படுத்துவதிலும், ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதிலும் முன்னணியில் உள்ளனர்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையை அங்கீகரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்தியது மற்றும் பல வழக்குகளில் நீதி வழங்கப்படுவதை அவர்களின் அயராத முயற்சிகள்
உறுதி செய்தது.
இத்தகைய அத்தியாவசியப் பணியை குற்றமாக்குவது நீதி மற்றும் ஜனநாயகத்தின் இலட்சியங்களை சிதைப்பதாகும்.
நடைமுறை மீறல்கள் உட்பட தன்னிச்சையான காவல்துறையின் நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சியை அலட்சியப்படுத்துவதை காட்டுகிறது. சிவில் சமூகத்தின் இந்த முன்னணி விளக்குகளை துன்புறுத்தும் இந்த போக்கு, உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு நிற்பவர்களை தண்டிக்கும் முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.
போலீஸின் சோதனைகள் மற்றும் அற்பமான குற்றச்சாட்டுகள் மக்களை அச்சுறுத்தும் நோக்கமாக உள்ளன.
இந்த யுக்தி தேசத்தின் ஜனநாயகக் கட்டமைப்பை அச்சுறுத்துவது மட்டுமின்றி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் தனிநபர்களின் உறுதியை பலவீனப்படுத்தும் அபாயமும் உள்ளது. நிர்வாகம், காவல்துறை மற்றும் அரசு அமைப்புகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும், அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும்,
அரசியல் தந்திரங்களாக மாறாமல் இருக்க வேண்டும் என்பது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் உறுதியான கருத்தாகும்.
சிவில் சமூகம், நீதித்துறை மற்றும் நீதி தேடும் அனைத்து சமூகங்களையும் இந்த அரசின் அத்துமீறல்களை கண்டிக்க வேண்டுமென ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக்கொள்கிறது.
மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்குமாறும், இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்களுக்கான பொறுப்புக்கூறலைக் கோருகிறது. கூட்டுச் செயற்பாட்டின் மூலமே ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்தவும் முடியும்.
"மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில புதிய அரசுகளிடமிருந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்"
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டின் மாநில புதிய அரசாங்கங்கள் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.
மகாராஷ்டிர மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர், ஜார்கண்டில் உள்ளவர்கள் ஜே. எம். எம்.-க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அந்தந்த மாநில அரசுகள் மக்களை உள்ளடக்கிய மற்றும் மக்கள் சார்பான அணுகுமுறையை கடைப்பிடித்து வகுப்புவாத மற்றும் சாதிய அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
மாநிலத்தின் அரசியல் சார்பின் அடிப்படையில் ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்டாது என மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
"டபுள் எஞ்சின் சர்க்கார்" என்ற சொல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மற்றும் மத்தியில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத மாநிலங்களை "மாற்றாந்தாய்" மனப்பான்மையுடன் நடத்துவதாகும் . அனைத்து நிர்வாக முயற்சிகளும், அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.
தினசரி லட்சக்கணக்கான மக்களை, பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை பாதிக்கின்றன.
மேலும் புதிய அரசாங்கங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் விவசாயிகளின் கவலைகளை களையச் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது துரதிர்ஷ்டவசமாக மதப் பிரிவானவாத சொல்லாட்சிகளை இப்போது கைவிட வேண்டும்.
இது சமூக பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகிறது.
மஹாராஷ்டிராவில் 'மஜி லட்கி பஹின் யோஜனா' மற்றும் ஜார்கண்டில் 'மையா சம்மான் யோஜனா' போன்ற பெண்கள் நலத் திட்டங்கள், பெண்களுக்கு பண பலன்களை உறுதி செய்யும் வகையில் தேர்தலுக்கு அப்பாலும் தொடர வேண்டும்.
இருப்பினும், பெண்களின் அதிகாரமளித்தல் என்பது நேரடிப் பரிமாற்ற பலனிற்காக (Direct Benefits Transaction) மட்டுமே என கட்டுப்படுத்தப்படக் கூடாது.
மாநில அரசுகள் பெண்களின் உண்மையான அதிகாரம், அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துதல், பாதுகாப்பு (security), அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
குடிமக்கள் அனைவருக்கும் நியாயமான, நீதியான மற்றும் இவையனைத்தும் உள்ளடக்கிய அணுகுமுறையை உறுதிசெய்யும் வகையில், இந்தக் கொள்கைகளை நிலைநிறுத்த புதிய அரசாங்கங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
"பத்திரிகையாளர் சந்திப்பில் அறிக்கை வழங்கியவர்கள்."
1. பேராசிரியர் சலீம் பொறியாளர், துணைத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
2. மாலிக் முத்தசிம் கான், துணைத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
வெளியீடு:
சல்மான் அஹ்மத்,
தேசிய உதவிச் செயலாளர்,
ஊடகத் துறை.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புது தில்லி-
https://www.facebook.com/share/15CwXoo9nt/