News Channel

பத்திரிக்கை அறிக்கை

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான் கடும் கண்டனம்

புதுதில்லி:
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி இடிக்கப்பட்டதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை என்றும், நாட்டில் மதச் சுதந்திரம் மற்றும் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை இது எழுப்புகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி இடிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அரசியல் துதிபாடுதலின் வெட்கக்கேடான, மன்னிக்க முடியாத செயலாகும். சஹாரன்பூர் அதிகாரிகள் இதன் மூலம் தங்களது பாரபட்சமான, மதவெறி மனநிலையை உலகுக்கு அம்பலப்படுத்தியதைத் தவிர வேறு எதையும் சாதித்துவிடவில்லை.
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறையாகும். நாட்டின் நிர்வாகத்தின் மீதும், சிறுபான்மையினரின் உரிமைகள் கையாளப்படும் விதம் குறித்தும் இது பெரும் நிழலை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகளைச் சீர்குலைத்து, சட்டத்தின் ஆட்சியை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப குறைக்கும் பெரும்பான்மைவாத அரசியலின் மிக மோசமான உதாரணங்களில் ஒன்றாக சஹாரன்பூர் மசூதி இடிப்பு வரலாற்றில் பதியப்படும்.”

நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மீறல்

அவர் மேலும் கூறுகையில், இடிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்கள் இந்த நடவடிக்கையின் மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“பல தசாப்தங்களாகப் பயன்பாட்டில் இருந்த ஒரு வழிபாட்டுத் தலத்தின் நிலையை அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்ய முடியும் என்றால், சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிடும்.
வக்ஃப், பட்டா, உடைமை போன்ற சட்டப்பூர்வ விவகாரங்கள் புல்டோசர்கள் மூலம் தீர்க்கப்பட்டால், நீதித்துறையே பயனற்றதாகிவிடும். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ தாமாக முன்வந்து (Suo Motu) தலையிட வேண்டாமா?
அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகவாதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.”

அரசியல் நோக்கமும் கவனத் திசைதிருப்பலும்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக வெறுப்பு அரசியலை முன்னெடுப்பவர்கள், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது:
“நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் மார்க்கம், அடையாளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுடனான பிணைப்பை பலவீனப்படுத்திவிட முடியாது. ஒரு வழிபாட்டுத் தலத்தை இடிப்பது சட்டப்பூர்வத் தகராறைத் தீர்ப்பதற்கான வழியாகாது.
தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்தை விடுத்து, நீதியும் சட்டத்தின் ஆட்சியும் மட்டுமே நிலைநிறுத்தப்பட வேண்டும்.”
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத்துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், புதுதில்லி