News Channel

பத்திரிக்கை அறிக்கை

சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்தல்

புது தில்லி:
தில்லி சாகேத் காவல் நிலையத்தில் பெண் பத்திரிகையாளர்களான ஷாஹீன் கான் மற்றும் நபீஸா கான் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் அத்துமீறல்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் JIH வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக JIH தேசிய செயலாளர் திருமதி ரஹ்மத்துன்னிஸா அப்துர் ரஸாக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சாகேத் காவல் நிலையத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலையும் முறைகேடான நடத்தையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சாகேத் பகுதியில் நிகழ்வு ஒன்றைப் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது தங்களைத் தடுத்து நிறுத்தியதாகவும், பின்னர் காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கியதாகவும் அப்பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
இருவரும் முஸ்லிம்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, காவல்துறையினர் தங்களை மேலும் கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, இத்தாக்குதலானது பெண்களின் தனிப்பட்ட கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறையின் மதவெறுப்பு அணுகுமுறை மற்றும் மதரீதியான பாகுபாடு குறித்தும் தீவிரமான கவலைகளை எழுப்புகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தாலோ அல்லது விதிமீறல்களைக் கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ கூட, காவல்துறையின் நடவடிக்கைகள் சட்டத்தின் எல்லைக்குள்ளும், விகிதாசார வரம்பிற்குள்ளும் மட்டுமே இருக்க வேண்டும். எந்தவொரு நடைமுறை மீறலும் காவலில் நிகழ்த்தப்படும் வன்முறை, அவமதிப்பு அல்லது பாகுபாட்டை நியாயப்படுத்த முடியாது.
குறிப்பாக, சுதந்திரமாகப் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்கள் அச்சமோ, பழிவாங்கும் அச்சுறுத்தலோ இன்றி தங்களது தொழில்சார் பணிகளை மேற்கொள்ளும் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்திய மகளிர் பத்திரிகையாளர் சங்கம் (IWPC), தில்லி பத்திரிகையாளர் சங்கம் (DUJ), பிரஸ் அசோசியேஷன் மற்றும் கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (KUWJ) ஆகியவை முன்வைத்துள்ள பக்கச்சார்பற்ற விசாரணைக்கான கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்த விசாரணை வெளிப்படையானதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையிலும் இருப்பதை தில்லி காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டும். தொடர்புடைய அனைத்து சிசிடிவி காட்சிகள், மருத்துவ ஆவணங்கள், காணொளிகள் மற்றும் பிற சான்றுகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொதுவாழ்விலும் தொழில்சார் களத்திலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விரிவான கேள்விகளை இச்சம்பவம் எழுப்பியுள்ளது. தங்களது தொழில்முறை மற்றும் அரசியலமைப்புச் சுதந்திரங்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு எதிராக வன்முறை, மிரட்டல் அல்லது அவமதிப்பு நிகழ்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, ஒரு ஜனநாயக சமூகம் பெண்களின் கண்ணியத்தை மதிப்பதாகக் கூறிக்கொள்ள முடியாது. மேலும், மத அடையாளம் என்பது எந்தவொரு பாகுபாட்டிற்கும் பாரபட்சத்திற்கும் அடிப்படையாக மாறிவிடக்கூடாது.
பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பது அரசியலமைப்பு வழங்கிய கடமையாகும். ஆனால், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அமைப்புகள் அந்தக் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம் தீவிர கவலையை ஏற்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், பெண்கள் மீதான வன்முறை, மதவெறுப்பு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியைச் சமூகத்திற்கு உணர்த்தவும் பொறுப்புள்ள அனைத்து அமைப்புகளும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.”
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசிய செயலாளர், ஊடகப் பிரிவு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புது தில்லி