News Channel

பத்திரிக்கை அறிக்கை

06 ஆகஸ்ட் 2026: தேசப்பற்று என்பது ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடுவதால் மட்டுமே அளவிடப்பட முடியாது என்றும், தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தியுள்ளது. கல்வித் துறையில் முழுமையான சீர்திருத்தங்களும், வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் பேரிடர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளும் அவசியம் என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் உள்ள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026, நாட்டின் கல்வி அமைப்பில் நிலவும் சவால்கள் மற்றும் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக அமைப்பின் மூத்த நிர்வாகிகள் தங்களது கருத்துகளை வெளியிட்டனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் மலிக் முஹ்தசிம் கான் பேசுகையில், வந்தே மாதரம் பாடல் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் நிறுவனங்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எப்போதும் மதித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வந்தே மாதரம் பாடலின் சில சரணங்களில் தாய்நாட்டை தெய்வமாக உருவகப்படுத்துவதும், சில தெய்வங்களுடன் அதனை இணைத்துக் குறிப்பிடுவதும், இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையுடன் (தௌஹீத்) ஒத்துப்போவதில்லை என்றார். இது புதிய கருத்தோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் நிலைப்பாடோ அல்ல; இந்தியாவின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சூழலில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கருத்தாகும் என்றும் அவர் கூறினார். மதச் சுதந்திரம் மற்றும் மனச்சாட்சியின் சுதந்திரத்துடன் நேரடியாக தொடர்புடைய ஒரு விஷயத்தில், மதச் சிறுபான்மையினரிடையே தேவையற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் நாடாளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்த மசோதா வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அந்தப் பாடலுக்கு எதிராக “அவமதிப்பு” அல்லது “மரியாதைக் குறைவு” எனக் கருதப்படும் செயல்களைக் குற்றமாக்குகிறது. இவ்வாறான சொற்கள் தெளிவற்றவையாகவும், தனிநபர் விளக்கத்திற்கு உட்பட்டவையாகவும் இருப்பதால், அவை தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம் என்று அவர் எச்சரித்தார். உச்சநீதிமன்றத்தின் பிஜோ எம்மானுவேல் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அவர், உண்மையான மத நம்பிக்கையின் அடிப்படையில் மரியாதையுடன் பங்கேற்காமல் இருப்பதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமை என்பதை நினைவூட்டினார். தேசப்பற்று என்பது ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடுவதாலோ, முழக்கமிடுவதாலோ அல்லது ஒரு குறியீட்டு செயலின் மூலம் மட்டுமோ அளவிடப்பட முடியாது என்றும், தேசியச் சின்னங்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதோடு அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களும் பாதிக்கப்படாதவாறு, இந்த மசோதாவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தேவையான பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தியது. கல்வித் துறையின் தற்போதைய நிலை குறித்து பேசிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் இன்ஜினியர், நீட் தேர்வு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியது, கல்வித் துறையின் மீது மக்களிடையே நிலவும் ஆழமான அதிருப்தியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், ஒருவரை மாற்றுவதால் மட்டும் பல ஆண்டுகளாக கல்வித் துறையில் தேங்கியுள்ள கட்டமைப்புச் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்தில் வெளியான நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 94 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்றும், சராசரியாக தினமும் 25 அரசு பள்ளிகள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இது பொதுக் கல்வி அமைப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருவதற்கும், கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருவதற்கும் கவலைக்குரிய அறிகுறியாகும் என்றார். அரசுப் பள்ளிகள் மூடப்படுவது, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது, கல்வி வணிகமயமாக்கப்படுவது, சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைகள் சுருக்கப்படுவது மற்றும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்து வருவது ஆகியவை இந்தியக் கல்வி அமைப்பின் திசை, முன்னுரிமைகள் மற்றும் நிர்வாக அணுகுமுறையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று அவர் கூறினார். கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 6 சதவீதம் ஒதுக்க வேண்டும்; மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; அரசுப் பள்ளிகள் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்கள் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும்; தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும்; கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் கல்விசார் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள், ஒழுக்கநெறிகள், பொறுப்புள்ள குடியுரிமை, சமூக நல்லிணக்கம் மற்றும் இந்தியாவின் பன்முகப் பாரம்பரியத்தை மதிக்கும் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்புக் கல்வியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் சலீம் இன்ஜினியர், அசாம், ஒடிசா, குஜராத், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஆண்டுதோறும் வெள்ளப் பேரிடர்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது, நிவாரண நடவடிக்கைகளை மட்டும் மையப்படுத்திய அணுகுமுறையை மாற்றி, பேரிடர் தடுப்பு, முன்கூட்டிய தயார்நிலை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை மையப்படுத்திய நீண்டகாலத் திட்டங்கள் அவசியம் என்பதை உணர்த்துவதாக அவர் கூறினார். மீட்புப் பணிகளும் மனிதாபிமான உதவிகளும் இன்றியமையாதவை என்றாலும், அறிவியல் அடிப்படையிலான ஆற்று நீர் மேலாண்மை, இயற்கை நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், வடிகால் அமைப்புகளை மேம்படுத்துதல், முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பேரிடர் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு திட்டமிட்ட மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளுக்கு அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தன்னார்வலர்கள் மற்றும் பிற சமூக நல அமைப்புகளின் சேவைகளைப் பாராட்டிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுகள், தன்னார்வ அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தாராளமாக உதவிக்கரம் நீட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். வெளியீடு: ஸல்மான் அஹ்மத், தேசியச் செயலாளர், ஊடகத்துறை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், புதுடெல்லி.