News Channel

"பத்திரிக்கை அறிக்கை"

"பத்திரிக்கை அறிக்கை"

26 பிப்ரவரி 2026

காசாவில் கடும் மனிதாபிமான நெருக்கடி நிலவும் சூழலில் பிரதமரின் இஸ்ரேல் பயணம்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

புது தில்லி: 
காசாவில் நம் காலத்தின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடனான அவரது பொதுச் சந்திப்புகள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சதாத்துல்லாஹ் ஹுசைனி தனது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“பிரதமரின் இந்தப் பயணம், அவரது உரைகள் மற்றும் வெளிப்படுத்திய அணுகுமுறை ஆகியவை நீதிக்கான குரலாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் இந்தியாவின் வரலாற்றுப் பெருமிதத்தைக் கருதும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. 

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள், 
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு இணையானவை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐநா அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான முகமைகள் விவரிக்கும் இந்தச் சூழலில், இது குறித்த தெளிவான மற்றும் துணிச்சலான கண்டனம் பிரதமரிடமிருந்து வெளிவராதது எதிர்பாராதது மட்டுமல்ல, வேதனையளிப்பதும் கூட.”

சையத் சதாத்துல்லாஹ் ஹுசைனி 
மேலும் குறிப்பிடுகையில், 
“இந்தியா வரலாற்று ரீதியாகவே நிறவெறி, காலனித்துவ ஆக்கிரமிப்பு மற்றும் இனப் பாகுபாடுகளை உலகெங்கிலும் எதிர்த்து வந்துள்ளது. 
சர்வதேச அரங்கில் இந்தியாவின் தார்மீக அந்தஸ்து வெறும் பாதுகாப்பு நலன்களால் மட்டும் கட்டப்பட்டதல்ல; மாறாக நீதி, கருணை மற்றும் ஒடுக்கப்பட்டோருடனான ஒருமைப்பாடு போன்ற நாகரிக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பயணத்தின் போது பிரதமர் அந்தப் பாரம்பரியத்தை நிலைநாட்டுவார் என்றே இந்திய மக்கள் எதிர்பார்த்தனர்,” என்றார்.

இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை நீண்டகாலமாக ஆக்கிரமித்திருப்பது, சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் 'நிறவெறி' (Apartheid) என்று விவரிக்கப்படும் முறையான பாகுபாடுகள் மற்றும் காசாவில் நடந்து வரும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஆகியவை வெறும் அரசியல் மோதல் மட்டுமல்ல, மனிதகுலத்தின் தார்மீக நெருக்கடியாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

பாலஸ்தீனியர்களின் துயரங்கள் குறித்து தெளிவான மற்றும் துணிச்சலான அக்கறையை வெளிப்படுத்தாமல், இஸ்ரேலிய தலைவர்களுடன் காட்டிய நெருக்கமும் இணக்கமும் நீதியின் பக்கம் நிற்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனசாட்சியைப் புண்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டமே காலனித்துவ ஆதிக்கத்திற்கும் அநீதிக்கும் எதிரான ஒரு தார்மீகப் போராட்டமாகும் என்பதை வலியுறுத்திய ஜமாஅத் தலைவர், “உண்மை, நீதி மற்றும் மனித மாண்பு ஆகியவற்றில் இந்தியாவின் தேசிய அடையாளமும் உலகளாவிய மரியாதையும் அடங்கியுள்ளன. 

இத்தகைய பேரழிவுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் நடக்கும்போது மௌனமாக இருப்பதோ அல்லது தார்மீக ரீதியாகத் தெளிவற்ற நிலைப்பாட்டை எடுப்பதோ இந்தியாவின் பெருமைமிக்க பாரம்பரியத்தை சிதைப்பதோடு, 'குளோபல் சவுத்' (Global South) நாடுகளின் கொள்கை ரீதியான குரலாகத் திகழும் இந்தியாவின் நம்பகத்தன்மையையும் பலவீனப்படுத்தும்,” என்றார்.

பாலஸ்தீனப் பிரச்சனையை இந்திய மக்கள் வெறும் புவிசார் அரசியல் விஷயமாகப் பார்க்கவில்லை, மாறாக அதை ஒரு தார்மீக மற்றும் மனிதாபிமானப் பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். 

மதம், புவியியல் அல்லது அரசியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டு, இந்தியாவின் ஆன்மா எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நின்றுள்ளது. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களில் பிரதிபலிக்கும் நமது கலாச்சார அறம், அநீதிக்கு எதிராக உண்மையை உரக்கப் பேசத் தலைமையை வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய சையத் சதாத்துல்லாஹ் ஹுசைனி, “ஜமாஅத் எப்போதும் காலனித்துவ ஆக்கிரமிப்பு, நிறவெறி மற்றும் அநீதியை எதிர்த்து வந்துள்ளதுடன், பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இந்த நிலைப்பாடு அரசியல் லாபங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல
மாறாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த அதே சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதி என்ற உலகளாவிய அறநெறிகளிலிருந்து உருவானது,” என்று குறிப்பிட்டார்.

“இந்தியாவின் உண்மையான பலம் அதன் பொருளாதார அல்லது பாதுகாப்புச் சக்தியில் மட்டும் இல்லை, அதன் தார்மீகக் குரலில் (Moral Voice) உள்ளது. இத்தகைய வரலாற்று அநீதிகள் நிகழும் தருணங்களில், இந்தியாவின் மனசாட்சியும் நாகரிக ஆன்மாவும் அதன் தலைமையை வழிநடத்த வேண்டும்,” என்று கூறி அவர் தனது அறிக்கையை நிறைவு செய்தார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி -