News Channel

அரபி மொழி வகுப்புகள் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது

கடந்த ஜனவரி 4, ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு, எக்ஸ்பெர்ட்ஸ் ஆன்லைன் அகாடமி மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மதரஸா அந்நூர், தாங்கல் ஆகியவை இணைந்து அரபி மொழி வகுப்புகள் சான்றிதழ் வழங்கும் விழாவை நடத்தின. முதல் நிகழ்ச்சியாக ஷப்ரின் (GIO) திருக்குர்ஆன் ஓதினார். மௌலவி ஆசிரியர் அப்துல் ஹலீம் அல் புஹாரி அவர்கள் வரவேற்புரையாற்றி விழாவை ஆரம்பித்தார். தொடர்ந்து, வகுப்பின் மாணவிகளான மூவர் அரபி மொழியில் வகுப்பு எவ்வாறு நடைபெற்றது, ஆசிரியர் எவ்வாறு பயிற்றுவித்தார், தேர்வுகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதைக் குறித்து விளக்கமாக உரையாற்றினர். பின்னர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் பொன்னாடை உடுத்தி கௌரவித்தனர். அதன்பின் மௌலவி ஹிதாயத்துல்லா காசிமி, வடசென்னை தீனியாத் முஆவின் ஹஜ்ரத் அவர்கள் முதலில் உரையாற்றி, குர்ஆனை ஓதுவது, அதைக் கற்றுக்கொள்வது மற்றும் அதன் அர்த்தத்தை உணர்ந்து ஓதுவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இரண்டாவதாக அகமது அலி சாஹிப் அவர்கள் அரபி மற்றும் உருது மொழிகளில் அரபி மொழியின் அவசியத்தை விளக்கினார். மூன்றாவதாக மௌலானா மௌலவி அப்துல் ராசிக் அல் புஹாரி, முதல்வர், மதரஸா அந்நூர் நிஸ்வான், திருவண்ணாமலை, தமது உரையில் ஒவ்வொரு மொழியும் ஒருவருக்குள் இன்னொரு நபரைப் போன்றது; தமிழ்மொழி, உருது மொழி, அரபி மொழி ஆகிய மூன்று மொழிகளை கற்றால் அது மூன்று நபர்களுக்குச் சமமானது எனக் கூறி, அரபி மொழி கற்றலுக்கான ஆர்வத்தை ஊட்டினார். தொடர்ந்து, எக்ஸ்பெர்ட்ஸ் ஆன்லைன் அகாடமி இயக்குநர் மௌலானா முஹம்மத் தாவூத் அன்சாரி அல் புஹாரி அவர்கள், தன்னிடம் அரபி மொழி கற்க வருபவர்களில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் அதிகமாக இருந்து, அவர்கள் அரபி மொழியை எவ்வாறு பயன்படுத்தி குர்ஆனை விளங்கி இஸ்லாத்திற்கு வருகிறார்கள் என்பதைக் குறித்த உணர்ச்சிகரமான இரண்டு நிகழ்வுகளை எடுத்துரைத்தார். இவ்விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் 12 மாணவர்கள் சான்றிதழ்கள் பெற்றனர். இதில் ஒரு பகுதியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டதுடன், மூன்று பகுதிகளை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், வகுப்பில் பயின்ற மாணவிகள் அரபி மொழி கற்றதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பயன்கள், குர்ஆனை எவ்வாறு விளங்க முடிகிறது, அது எவ்வாறு உதவிகரமாக உள்ளது என்பதைக் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தனர். இறுதியாக மௌலானா மௌலவி முஹம்மத் தாவூத் அன்சாரி அவர்கள் நன்றி உரையாற்ற, நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் மாணவிகளுக்கும் வருகை தந்த விருந்தினர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் வகையில் நிறைவடைந்தது.