News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை செய்தி 

11 நவம்பர் 2025

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
அகில இந்தியத் தலைவர் 
சையத் சஆததுல்லாஹ்  ஹுசைனி அவர்கள் செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து வெளிப்படையான உயர்மட்ட விசாரணை வேண்டி வலியுறுத்தல்; 

பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு மற்றும் பொறுப்புக்கூறல் வேண்டி அழைப்பு

புது தில்லி: 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அகில இந்திய தலைவர் சையத் சஆதாதுல்லாஹ்  ஹுசைனி அவர்கள் திங்கள்கிழமை மாலை தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கொடூரமான குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் மீது ஆழ்ந்த துக்கத்தை வெளியிட்டு, 

வெளிப்படையான உயர்மட்ட விசாரணை, 
பாதுகாப்புத் தோல்விக்கான உடனடிப் பொறுப்பேற்றல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் கூறியதாவது:

 “தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த கொடூரமான குண்டுவெடிப்பில் உன்னதமான உயிர்கள் பலியாகியதையும், 
பலர் காயமடைந்ததையும் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளோம். 

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காயமடைந்தோருடன் பக்கபலமாக நிற்கிறோம்.
அவர்களது விரைவான மற்றும் முழுமையான குணமடைதலுக்காகப் பிரார்த்திக்கிறோம். 
இந்தத் துக்கமும் வேதனையும் நிறைந்த நேரத்தில் தில்லி மக்களுடன் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

சையத் சஆதாதுல்லாஹ் ஹுசைனி மேலும் கூறுகையில்:
 “ஆரம்பகட்ட ஊடகச் செய்திகள் இது தீவிரவாதச் செயலாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. விசாரணை அமைப்புகள் இதனை உறுதிப்படுத்தினால், இந்த அருவருக்கத்தக்க செயலை நாங்கள் தயக்கமின்றிக் கண்டிக்கிறோம்.
குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம். 
தேசியத் தலைநகரின் 
இதயப் பகுதியில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது பாதுகாப்பில் பெரும் தோல்வியைக் காட்டுகிறது. 

பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரத்தில் உள்ளோர் உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும். குடிமக்களின் உயிரும் பாதுகாப்பும் முதன்மையானவை.
அரசு அரசியலமைப்புச் சட்டப்படி அவர்களைக் காப்பதற்கான கடமையை நிறைவேற்ற வேண்டும்.

சில ஊடகப் பிரிவினரும் சமூக வலைதளப் பயனர்களும் தவறான தகவல்களையும் சமூக வெறுப்புணர்வு கதைகளையும் பரப்பும் பொறுப்பற்ற நடத்தையைக் கண்டித்தார். 
அவர் கூறுகையில்: “நெருக்கடி நேரங்களில் குடிமக்களிடையே ஒற்றுமையும் உறுதுணர்வும் மிகவும் தேவைப்படுகின்றன. 
இத்தகைய இழிவான சம்பவங்களைத் தமது சித்தாந்த அல்லது அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்துவோர் அடையாளம் காணப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் கீழ் கண்ட 👇 கோரிக்கைகளை 
வலியுறுத்தியுள்ளார்.

“இந்தக் குண்டுவெடிப்பு குறித்து முழுமையான, 
வெளிப்படையான, காலக்கெடுவுக்குட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அனைத்துச் சான்றுகளும் பக்கச்சார்பின்றிப் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். 

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடியாகவும் உரியதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

காயமடைந்தோருக்கு முழுமையான மருத்துவம் மற்றும் மறுவாழ்வு உதவி அளிக்கப்பட வேண்டும். 

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாதுகாப்புத் தோல்விகளுக்கு உயர்மட்டத்தில் பொறுப்பேற்க வேண்டும்.

தமது அறிக்கையை நிறைவு செய்த சஆதத்துல்லாஹ்  ஹுசைனி
“தீவிரவாதம் எந்த மதத்தின் வெளிப்பாடாகவும் இருக்க முடியாது.

அது மதத்தின் துரோகமே. 
எந்தக் கொடியின் கீழ் நிகழ்ந்தாலும், ஒவ்வொரு வன்முறைச் செயலும் ஒரே மாதிரியான தயக்கமற்ற கண்டனத்தைப் பெறத் தகுதியானது. 

அனைத்து நம்பிக்கையாளர்களும் இப்போது ஒன்றிணைந்து, தீவிரமயமாக்கலை எதிர்த்து, வெறுப்பை நிராகரித்து, தீவிரவாதத்தின் காரணங்களையும் வலைப்பின்னல்களையும் வேரோடு அகற்ற ஒன்றிணைவோம். 

ஒரு ஒன்றுபட்ட சமூகமே நாட்டின் பன்முகத்தன்மை, அமைதி மற்றும் எதிர்காலத்தைக் காக்க முடியும்.

வெளியிட்டவர்:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலர், ஊடகத் துறை, ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்,
புது தில்லி