News Channel

பத்திரிக்கை செய்தி

*பத்திரிக்கை செய்தி*

கடுமையான நடவடிக்கை தேவை
---------------------------
 
கள்ளக்குறிச்சி, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விஷச் சாராயம் குடித்து 180க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 51 பேர்  பலியாகி இருப்பது வேதனையைத் தருவதாகவும் இதில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனீஃபா மன்பயீ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மது, போதைப் பழக்கம் எதிர்கால தலைமுறையைச் சீரழித்து விடும் என்ற அச்சம் மேலிடுகிறது. விஷச் சாராயம் மிக இலகுவாகக் கிடைக்கின்ற வகையிலே விற்பனை செய்யப்பட்டு வருவதும் போதிய சட்ட நடவடிக்கைகளை எடுக்காததும் அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. கடந்த ஆண்டு மரக்காணத்தில் விஷச் சாரயச் சாவுகள் ஏற்பட்டபோது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு நிகழ்வே இப்போது நடந்திருக்காது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் விஷச் சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மீதும், இதில் ஈடுபட்ட அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 இலட்சம் வழங்கிவிட்டதால் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடப்போவதில்லை. பூரண மதுவிலக்கே இதற்கான ஒரே தீர்வு என்பதை அரசு உணர்ந்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு, அதிகாரிகள் மது விஷயத்தில் அரசுக்கு வருமானம் என்பன போன்ற போலி காரணங்களைச் சொல்லி சமாளிப்பதை விட்டுவிட்டு மதுவை முழுமையாகத் தடை செய்கின்ற வகையில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பொது மக்களும் இந்த பேரிழப்புகளைப் பார்த்த பின்பும் படிப்பினை பெற்றுக்கொண்டு மது, போதை பொருட்களை ஒரு சமூக தீமையாக உணர்ந்து அதிலிருந்து விலக வேண்டும். எல்லாருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. மதுவை இந்த மண்ணிலிருந்து அகற்றாதவரை குற்றங்களைக் குறைக்க முடியாது. மது அனைத்துத் தீமைகளுக்கும் தாய். மது, போதையைத் தடை செய்ய அரசு முன்வர வேண்டும். மக்களும் மதுவுக்கெதிராக உரத்து குரல் கொடுப்பதுடன் மதுவிலக்கிற்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

51 உயிர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இந்த துயரமான நேரத்தில் எங்களது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.

மௌலவி A.முஹம்மது ஹனீஃபா மன்பயீ,
மாநிலத் தலைவர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)
தமிழ்நாடு & புதுச்சேரி


https://www.facebook.com/share/p/XibUk56q65oAzUG2/?mibextid=oFDknk