ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) நாச்சியார்கோயில் நடத்திய மது மற்றும் போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருமுனைக் கூட்டம்.
நாள்: 26.08.2026
இடம்: திருநறையூர் – நாச்சியார்கோவில்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) நாச்சியார்கோவில் கிளை சார்பாக, மது மற்றும் போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருமுனைக் கூட்டம் 26.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
திருநறையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
பேரணிக்கு ஜனாப் A. ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள், கிளைத்தலைவர் – JIH, நாச்சியார்கோவில், தலைமை தாங்கினார். பேரணியை திரு. S. ராஜா அவர்கள், காவல் ஆய்வாளர் நாச்சியார்கோவில், தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நாச்சியார்கோவில் கடைத்தெருவில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் சுமார் 200 முதல் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்* கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பளித்தனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று, மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மௌலவி ஹாஃபிஸ் முஹம்மது சலீம் ரியாஜி, இமாம் ஜாமிஆ மஸ்ஜித் அவர்கள்,அருட்தந்தை வின்சென்ட் சகாயராஜ் அவர்கள், பங்குத்தந்தை – அடைக்கலமாதா ஆலயம், நாச்சியார்கோவில், மற்றும் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள், நிறுவனார் – ஜோதிமலை இறைப்பணி, திருக்கூட்டம், கும்பகோணம், மற்றும் JIH மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் முஹமது யூனுஸ் ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர்.
இந்நிகழ்வை சகோ. முகம்மது ஜியாவுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பைச் (SIO) சேர்ந்த மாணவர்கள் மதுவும் போதைப்பொருட்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளை பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் ஒரு விழிப்புணர்வு செயல்விளக்கம் (டெமோ) நடத்தினர். இதில் இரண்டு மாணவர்கள் கல்வி கற்கும் இளைஞர்களைப் போன்று தோற்றமளித்து, பின்னர் போதைப்பொருள் மற்றும் மதுவின் தீமைகளை பிரதிபலிக்கும் வகையில் முகமூடி அணிந்து சிறிய நடிப்பின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததுடன், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், நிகழ்ச்சியில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான கருத்துக்கள், இளைஞர்களை பாதுகாப்பது, குடும்பங்களின் எதிர்காலத்தை காப்பது மற்றும் போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவது தொடர்பான கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
மொத்தத்தில், பொதுமக்களின் சிறப்பான பங்களிப்புடனும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடனும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மது மற்றும் போதைக்கு எதிரான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.