News Channel

ஸமாஹத் மாதாந்திர உதவித் திட்டம் – தொடக்க நிகழ்ச்சி

21 டிசம்பர் 2023 அன்று மாலை கோவை கரும்புக்கடை, ஹிதாயா வளாகத்தில் வைத்து ஸமாஹத் – மாதாந்திர உதவித் திட்டத்தினை ஜமாஅத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப். நசீருத்தின் சாஹிப் அவர்களும், முன்னாள் ஜமாஅத் தமிழகம், புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜனாப். சபீர் அஹமது சாஹிப் அவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

ரூபாய்.1300 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கி அவர்களின் பொருளாதார சுமையை குறைப்பது என்பதுதான் இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இத்திட்டத்தில் உதவும் நல்லுள்ளங்களிடம் இருந்து மாதாந்திர சந்தா பெற்றுக் கொண்டு தொடர்ச்சியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஸமாஹத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூகப் பிரமுகர்கள் இத்திட்டம் குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

கிரஸென்ட் பள்ளி தாளாளர் ஜனாப். ஜெய்னுல் ஆபிதீன்‌ அவர்கள் கூறியதாவது “இத்திட்டம் அவசியமானது மட்டுமல்ல. அடிப்படைத் தேவையானது. இப்படியெல்லாம் திட்டமிடுவதற்கும், தொடர்ந்து செயல்படுத்துவதற்கும் ஜமாஅத்தே இஸ்லாமியால் மட்டுமே முடியும். இன்று நாங்கள் ஸ்கூல் நடத்துவதற்கு இஸ்லாமியா  ஸ்கூல்தான் காரணம். எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தும் தைரியத்தை தந்தது ஜமாஅத்தே இஸ்லாமி. நானும் மாதம் பணம் தருகிறேன்” என்று மகிழ்வோடு தெரிவித்தார்.

ஷம்சுல் இஸ்லாம் பள்ளிவாசல் செயலாளர் ஜனாப்.கபீர் சாஹிப் அவர்கள் கூறியதாவது “சமூகத்தின் நலன் சார்ந்து சிந்திப்பதில் நீங்கள் வழிகாட்டி. இது அனைவருக்கும் வழிகாட்டும் திட்டம். இதில் விஷேசமான அம்சம் என்னவென்றால் 20% முஸ்லிம் அல்லாத மக்களுக்கு ஒதுக்கியுள்ளீர்கள். உங்களுடைய திட்டங்கள் வெற்றிபெற இதுவும் காரணம். இப்படியெல்லாம் சிந்திக்க ஜமாஅத்தே இஸ்லாமியால் மட்டுமே முடியும்.” என்று கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் ஜனாப். S.A.பஷீர் அவர்களும், அரஃபா ஸ்டோர் ஜனாப். ஹாசிம் சாஹிப் அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மனிதவள மேம்பாடு செயலாளர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மத்திய மண்டலத் தலைவர் ஜனாப். பீர் முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார்கள். மத்திய மண்டலச் செயலாளர் ஜனாப். முஹம்மது ஹக்கீம் அவர்கள் நிகழ்வை வழி நடத்தினார்கள்.