News Channel

மாற்றத்தை ஏற்படுத்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி

நான் கலந்து கொண்ட முதல் இப்தார் விருந்து. 08- 03--2026 ஞாயிறு.

Venue: Meeting Point Restaurant.
 VOC Road. Mannargudi.
எனது 1992 batch மாணவர்கள் அப்துல் ரஹ்மானும் மன்சூரும் அழைப்பிதழ் கொடுத்திருந்தனர்.
50பேரை அழைத்திருப்பதாகச் சொன்னார்கள். என்னை மேடையில் பேச அழைக்கக் கூடாது என்று உறுதியாகச் சொல்லி விட்டேன். சரியாக 6 மணிக்கு சைக்கிளில் சென்று விட்டேன். நான் ஒருவன் மட்டுமே சைக்கிள். 
50 பேர் உட்காரக்கூடிய அசைவ உணவு விடுதி . சுத்தமாக இருந்தது. நுழைந்தவுடன் வலது புறம் சுத்தமான தனித்தனியான சமயல் அறைகள். உணவு மேசைகளுக்கு இடது புற காலி இடத்தில் நிறைய செடிகள் வைக்கப்பட்டு "சில்க் சட்டை" போட்ட சுமார் 50 நாற்காலிகள் நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்தது. 

இப்தார் (Iftar) என்பது ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் பகல் முழுவதும் நோன்பு நோற்று, சூரியன் மறைந்த பிறகு, மக்ரிப் தொழுகை நேரத்தின்போது உணவருந்தி நோன்பை முடித்துக் கொள்ளும் மாலை நேர உணவாகும். இப்தார் நன்றியுணர்வையும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் ஒரு முக்கிய  நிகழ்வாகும். 

நான் உணவு விடுதி மேசையில் அமர்ந்த பின் விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்.  ST.Joseph's பெண்கள் பள்ளியிலிருந்து அருட்சகோதரிகள் 
நால்வர் காவிநிற சேலை, சிலுவை கோர்த்த மெல்லிய (stainless steel) சங்கிலியுடன் எனக்கு முன்பாக அமர்ந்தனர். அவர்களோடு அப்பள்ளி ஆசிரியை ஒருவரும் வந்திருந்தார். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அவர்களோடு அவர்கள் பள்ளி மாணவிகளின் அந்தக்கால பாவாடை தாவணி சீருடையை துப்பட்டா சுடிதார் சீருடையாக மாற்றியதில் என் பங்கைப் பற்றிய சரித்திரம் பேசினேன். 

மணி6.15க்கு மேசையில் fruit salad and juice வைக்கப்பட்டது. ஒருவர்  அரபி மொழியில் தொழுகை சொன்னார். அதன்பிறகு தமிழில் இறைவனுக்கு நன்றி கூறி "சாப்பிடுங்க" என்றார். 
Fruit salad சாப்பிட்டவுடன்  ஒரு கிண்ணம் நோம்புக்கஞ்சி கொடுத்தார்கள். முதல் முறையாக சாப்பிட்டேன். மாமிசம் கலந்ததால் கறிக்கஞ்சியாம். நல்ல சுவை.

மணி6.30க்கு திறந்தவெளி அரங்கில் அமர்ந்தோம். சுமாராக 20 இஸ்லாமிய நண்பர்கள் 3 நிமிடங்களில், மண்டியிட்டு தொழுது முடித்தனர். அமர்ந்திருந்த நான் விருந்தினர்களை கவனித்தேன்.
சுமாராக Hindus 15. Catholics 5. Protestants 5. இவர்களில் பெரும்பாலோரை நான் அறிவேன்.
60+வயதினர் சுமார் 5.
70+வயதினர் நானும் ஒரு இஸ்லாமியரும். 
மற்ற அனைவரும் 55வயதிற்கு உட்பட்டவர்கள்.   இந்துக்களில் நால்வர் என் பழைய மாணவர்கள்.
எனக்குத் தெரிந்து, கலந்து கொண்ட விருந்தினர்களில் அரசியல், பணம்
படைத்தவர்கள் இல்லை. 

ஒருவரை மிக முக்கியமானவர் என்று சொல்ல விரும்புகிறேன். கிரீன் நீடா (Green Needa) அமைப்பின் நிறுவனர் ராஜவேல். குறுங்காடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்.  ஒரு கோடி பனைமரங்கள் நடுவதை இலக்காக கொண்டு செயல் பட்டுக் கொண்டுள்ளார். தேசியப் பள்ளியின் பழைய மாணவர். பெருமை. வாழ்த்துகள். 

மணி6.40க்கு நிகழ்ச்சி தொடங்கியது.
மேடையில் மூன்று இருக்கைகள். முதல் இருக்கையில் சிறப்புரையாற்ற இருக்கும் 
Dr.A.ஹஜ் மைதீன். ஆளில்லாத இரண்டாம் இருக்கை. மூன்றாம் இருக்கையில் St.Joseph's பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி. 

ஆளில்லாத இருக்கை இந்துவாக உள்ளவருக்கு... யாராக இருக்கும்?!
மன்சூர் அந்த ஆளில்லாத இருக்கையை அலங்கரிக்க தன் பழைய ஆசிரியரான என்னை அழைத்தான். இப்போதெல்லாம் என் முகநூல் எழுத்துகள்  சர்ச்சைக் குரியதாக இருப்பதால், அங்கு எதுவுமே பேசாமல் நாற்காலியை "அலங்கரித்தால் போதும்" என்ற உறுதியோடு நடுவில் அமர்ந்தேன். 
முதலில் அருட்சகோதரி ஆன்மீகம், சமூக நல்லிணக்கம் பற்றி அழகாகப் பேசினார். அவர் கூறிய முக்கிய கருத்து, அனைவரும் சரித்திரம் படிக்க வேண்டும், உண்மை அறிந்து ஊடகங்களில் பேச வேண்டும். நல்ல கருத்து. 

அடுத்து மைக் என்னிடம் நீட்டப்பட்டது😬. 31வருட ஆசிரியர் பணியில் வகுப்பில் சொன்னதைச் சொன்னேன்:
"இந்துக்கள் தீபாவளியின் போது இஸ்லாமிய வகுப்புத் தோழனை  வீட்டிற்கு அழைக்க வேண்டும். இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையின் போது  இந்து வகுப்புத் தோழனை  வீட்டிற்கு அழைக்க வேண்டும்.  என்னையும் அழைக்க மறக்காதே என்று சொன்னதற்கு காரணம்... இரண்டு பண்டிகையிலும் அசைவம் உண்டு. 

30ஆண்டுகளாக யாரும் அழைக்கவில்லை. பிரியாணி தானாக கிடைக்காது! விடக்கூடாது! ஓய்வுபெற்ற 2010ம் ஆண்டு12A1 (comp.sc) மாணவன் பொதக்குடி மல்ஹர்தீனிடம்   "நான் உன் வீட்டிற்கு உன் வகுப்புத் தோழன் சரவணனுடன்  இந்த ஞாயிறு பிரியாணி சாப்பிட வருகிறேன்" என்று சொல்லிச் சென்றேன்.... வென்றேன்🤪....
இதைச் சொன்னதோடு  அமர்ந்திருக்கலாம். 
சொல்லாம இருக்க முடியல. சொல்லிவிட்டேன்.
"நான் சாதி மதம் சாராதவன்... நன்றி.வணக்கம்." என்று கூறி முடித்தேன். 

 Dr. ஹஜ் மைதீன் சிறப்புரைக்குப் பின் buffet முறையில் விருந்து. கோழி பிரியாணியும் கோழிக்கறி பிரட்டலும். புரதம் நிறைந்த உணவு. செரிக்க நேரமாகும். அளவோடு, திருப்தியாக சாப்பிட்டு இல்லம் திரும்பினேன்.