ஐந்து தளங்களில் தஸ்கியா!
பெரம்பூர் கிளையின் ரமளான் திட்டம்..!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெரம்பூர் கிளை ரமளானை முன்னிட்டு ஐந்து அம்சத் திட்டம் வகுத்திருக்கின்றது.
முதலாவதாக, உறுப்பினர்கள், ஊழியர்கள் அனைவரும் அத்தியாயம் அல்கஸஸை ஆழ்ந்து ஓதுவார்கள். இதன் பொருளை உணர்ந்து கொள்ள முயல்வார்கள்.
இரண்டாவதாக, நாள்தோறும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு ஜமாஅத் அரங்கத்தில் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்வும் நடத்தப்படும். இதில் மாநிலச் செயலாளர் கே ஜலாலுத்தீன் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை வழங்க இருக்கின்றார்கள். இந்த நிகழ்வு முகநூலில் நேரலையாகவும் ஒளிப்பரப்பப்பட இருக்கின்றது என்பது தித்திக்கும் செய்தி.
மூன்றாவதாக வாரம்தோறும் இஃப்தார் விருந்து நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டின் முதல் இஃப்தார் நிகழ்வில் மாநிலச் செயலாளர் எஸ் என் சிக்கந்தர் பேசுகின்றார். இதே போன்று மகளிருக்கு, இளைஞர்களுக்கு, சகோதர, சமுதாயச் சொந்தங்களுக்கு என தனித்தனி இஃப்தார் நிகழ்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன. ஊழியர்களின் இல்லங்களிலும் இஃப்தார் நிகழ்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.
நான்காவதாக, குர்ஆன் அருளப்பட்ட இந்த அருள் நிறை மாதத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் ஊழியரும் குறைந்தபட்சம் மூன்று பேருக்கேனும் குர்ஆன் பிரதிகளை வழங்குவார்கள். இவ்வாறாக 100 குர்ஆன் பிரதிகளை விநியோகம் செய்கின்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
ஐந்தாவதாக, ஒற்றைப் படை இரவுகளில் குர்ஆன் கூட்டாய்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
மேலும் இன்ஃபாக் தினம், ஜகாத் சேகரிப்பு, ஈகைப் பெருநாள் சந்திப்பு அழைப்பு, இல்லங்களில் அழைப்புப் பணி என வெவ்வேறு களங்களில் பணிகள் மும்முரமாக நடத்தப்பட இருக்கின்றன. இது பெரம்பூர் ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரும் எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
அல்லாஹ் அருள் செய்வானாக. நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்.