சாலிடாரிட்டி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
பத்திரிக்கைச் செய்தி
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பில் “இளைஞர்கள் தேர்தல் அறிக்கை” வெளியீடு
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு, இளைஞர்களை சரியான பாதையில் வழிநடத்தி, அவர்களை சமூகத்தின் பொறுப்புணர்வுள்ள குடிமக்களாக உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூக, கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. போதைப் பழக்கம், ஆபாசம் போன்ற இளைஞர்களை சீரழிக்கும் சவால்களுக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரங்களும், களப்பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேபோல், வேலைவாய்ப்பு, அறிவுசார் வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு பகுதிகளில் பயிற்சி பட்டறைகள் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் முதல் முறையாக இளைஞர்களை மையப்படுத்திய “இளைஞர்கள் தேர்தல் அறிக்கை” சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பில் ஜனவரி 6, 2026 அன்று கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர்களை வரவேற்றும், “இளைஞர்கள் தேர்தல் அறிக்கை” உருவான பின்னணி, அதன் அவசியம் குறித்து சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு – தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சகோ. ஹபீப் ரஹ்மான் B.E., அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து “இளைஞர்கள் தேர்தல் அறிக்கை” வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாலிடாரிட்டி தமிழ்நாடு தலைவர் திரு. முஹம்மது ரியாஸ் B.E., B.A., M.B.A., மாநிலச் செயலாளர்கள் – சகோ. ஜாபர் சாதிக், சகோ. ஹபீப் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர்கள் – மௌலவி. முஹம்மது நாசர் புஹாரி, சகோ. சபீர் அகமது, சாலிடாரிட்டி கோவை மாவட்ட செயலாளர் – சகோ. ரியாஸ் ஆகியோர் இணைந்து “இளைஞர்கள் தேர்தல் அறிக்கை”யை வெளியிட்டனர்.
இளைஞர்களை மையப்படுத்திய முதலாவது தேர்தல் அறிக்கை!
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய சாலிடாரிட்டி தமிழ்நாடு தலைவர் திரு. முஹம்மது ரியாஸ் அவர்கள், “தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, இளைஞர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு இத்தேர்தல் அறிக்கையை சாலிடாரிட்டி வெளியிடுகிறது.
இந்த அறிக்கை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களோடு கலந்துரையாடியும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநலம், மனித உரிமைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள வல்லுநர்களுடன் ஆலோசித்தும் உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மேம்பாடு மற்றும் அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான கோரிக்கைகளை உள்ளடக்கிய இத்தேர்தல் அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வழங்கி,
இக்கோரிக்கைகளை அவர்களது தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளாக இணைக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் சாலிடாரிட்டி வலியுறுத்தும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், இத்தேர்தல் அறிக்கையின் முதன்மை கோரிக்கையாக கல்வி, வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், விளையாட்டு, சமூக பங்களிப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய விரிவான “தமிழ்நாடு இளைஞர் கொள்கை” உருவாக்கப்பட வேண்டும் என்றும், இளைஞர் நலத்திட்டங்களைக் கண்காணித்து பரிந்துரை செய்யும் சட்டபூர்வ அமைப்பாக "தமிழ்நாடு இளைஞர் ஆணையம்" அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகள் மேம்பாடு, விளையாட்டு வசதிகள், மனித உரிமைகள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் இளைஞர்களை பாதிக்கும் பொதுப் பிரச்னைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதோடு, மாவட்டங்கள் ரீதியாகவும் தனிப்பட்ட கோரிக்கைகள் இத்தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இளைஞர்கள் நலன் மற்றும் மேம்பாடு தொடர்பாக நீண்ட ஆய்வு மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இத்தேர்தல் அறிக்கையை மக்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் கொண்டு சேர்க்க பத்திரிக்கை நண்பர்கள் துணை நிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் நிறைவாக, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு – தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சகோ. ஜாபர் சாதிக் அவர்கள், வருகை தந்த பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
இப்படிக்கு
ஹபீப் ரஹ்மான் B.E.,
மாநிலச் செயலாளர்,
சாலிடாரிட்டி தமிழ்நாடு.
(9566389942)