"மண்ணில் கைகள், இந்தியாவோடு இதயங்கள்" என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் -ன் குழந்தைகள் அமைப்பான Children Islamic Organisation (CIO) நாடு தழுவிய அளவில் பசுமை விழிப்புணர்வு பரப்புரையை நடத்தி வருகிறது.
இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாத காலமாக கோவை மாநகரில் குழந்தைகள் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு கண்காட்சிகள், சொற்பொழிவு நிகழ்வுகள், அதிகாரிகள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.
இப்பரப்புரையின் முத்தாய்ப்பாக, இன்று (ஜூலை 27, 2025) "மரங்களைப் பாதுகாக்க குழந்தைகளின் மாபெரும் பேரணி" கோவை கரும்புக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளோடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோவை வனத்துறை பாதுகாப்பு அதிகாரி திரு. பிரபு அவர்களும், கோவை குழந்தைகள் நல அதிகாரி திருமதி. ஹஃப்ஸா அவர்களும், கோவை கரும்புக்கடை துணை காவல் ஆய்வாளர் திரு. ஜோஸப் ஆகியோர் இணைந்து கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
பூங்கா நகர் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி, கோவையின் பல்வேறு தெருக்களில் ஊர்வலமாக பயணித்து, இஸ்லாமியா பள்ளி மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
பேரணி நிறைவு நிகழ்வின் முக்கிய தருணங்கள்
குழந்தைகள் பசுமையை, மரத்தைப் பாதுகாக்க கோஷமிட்டவர்களாக, எதிர்கால இந்தியாவிற்கான நம்பிக்கையின் ஒளியாய் பேரணி நிறைவுப் பகுதியான மைதானத்தில் ஒருங்கிணைந்தனர்.
பேரணி நிறைவு நிகழ்வு CIO சிறுவர். அதீகுர் ரஹ்மான் அவர்களின் அழகிய கிராஅத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து சிறுவர். முஸம்மில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இப்பேரணிக்கு தலைமை தாங்கி நடத்தித் தந்த CIO கோவை மாவட்ட தலைவர் சிறுமி. நபீலா கரம் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். மேலும் கோவை வனப்பாதுகாப்புத் துறை அதிகாரி திரு. பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S.உமர் ஃபாரூக் சாஹிப் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
CIO தமிழ்நாடு மாநிலம் பொறுப்பாளர் ஆசிரியர். M சலீம் அவர்கள் உறுதிமொழி வாசிக்க பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசுமையைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
"மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்" பரப்புரையின் கோவை பெருநகரப் பொறுப்பாளர் திருமதி. அணீஸ் பர்வீன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
ஒரு பசுமையான எதிர்காலத்தின் வாசலாக, இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று, கோவை மாநகரில் குழந்தைகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்வாக இப்பேரணி சிறப்பாக அமைத்து தந்தனர் என்றால் அது மிகையாகாது... எல்லாப் புகழும் இறைவனுக்கே!!