மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கலந்துரையாடிய CIO குழந்தைகள்!
Children Islamic Organisation (CIO) எனும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் சிறார் அமைப்பின் கீழ், “மண்ணில் கைகள், இந்தியாவோடு இதயங்கள்!” என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகரிலும் இந்தப் பரப்புரை பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்தப் பரப்புரையின் ஒரு அங்கமாக பல்வேறு முக்கியஸ்தர்களைச் சந்தித்து, பரப்புரையின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடி, மரக்கன்றுகளும் குழந்தைகளால் பரிசாக வழங்கப்படுகிறது. இதனையொட்டி CIO சிறார்கள் குழுவாகச் சென்று கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவரை IAS., அவர்களைச் சந்தித்தனர்.
அவரிடம், பரப்புரையின் முக்கியத்துவம், அதன் நோக்கம், குழந்தைகளின் பசுமை கனவு மற்றும் இந்த பிரச்சார இயக்கத்தின் உணர்வுப் பின்னணி குறித்து அவர்கள் மிக அன்போடு விவரித்தனர். மழலை மொழியில் ஆனால் தீவிர மனமோட்டத்துடன், குழந்தைகள் வழங்கிய கருத்துக்களை ஆட்சியர் பொறுமையுடனும், கவனத்துடனும் கேட்டுக் கொண்டார். அவருக்கு மரக்கன்றுகளும் பரிசாக வழங்கப்பட்டன.
சிறுவயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்பட விரும்பும் இந்தச் சிறார்களைப் பார்த்த அவர், CIO குழந்தைகளையும், CIO பணிகளையும் வெகுவாகப் பாராட்டினார்.