இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ள கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்த "பாதிரியார் பயிற்சி மாணவர்கள்".
கோவை நல்லாயன் புனிதப்பள்ளி மாணவர்கள் இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ளவும், முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்து தெரிந்துகொள்ளவும் நமது மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு இன்று (18 ஜூலை 2025) வருகை தந்தனர். தொடர்ந்து 13 வருடங்களாக பாதிரியார் பட்டம் பெறவுள்ள மாணவர்கள் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புடனும் மரியாதையுடனும் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசல் நிர்வாகிகள் பாதிரியார்களை வரவேற்றனர். தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் ஜனாப். அக்பர் அலி அவர்கள், வுளூ என்ற அங்கசுத்தியின் அர்த்தம் மற்றும் அதன் ஆன்மீகப் பின்னணியைக் கூறியபோது, மாணவர்களின் விழிகளில் விழிப்பும் ஆழமும் காணப்பட்டது. அவர்களும் தாமாகவே வுளூ செய்து, பள்ளிவாசலுக்குள் நுழைந்தனர்.
இஸ்லாம் குறித்தான தேடலோடு பள்ளியில் அவர்கள் நுழைந்ததும் அஸர் தொழுகைக்கான நேரம் என்பதால் தொழுகையை பார்வையிட்டனர். தொழுகை முடிந்தவுடன், தொழுகையாளர்களும் பாதிரிமார்களும் பரஸ்பரம் இன்முகத்தோடு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட காட்சிகள் இனிமையாக அமைந்தன.
அதனைத் தொடர்ந்து சிறிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் சாஹிப் அவர்கள் பாதிரியார்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
பின்னர், ஜமாஅத் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆசிரியர் M. சலீம் ( M.Sc., B.Ed., PGDSA) அவர்கள், இஸ்லாம் குறித்து மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக பாதிரியார்கள் இஸ்லாம் குறித்து தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக கேள்விகளை கேட்டு கலந்துரையாடினர். இந்நிகழ்வின் மூலமாக இஸ்லாம் குறித்தான தெளிவான பார்வை அவர்களுக்கு கிடைத்தது.
வருகை தந்த பாதிரியார்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. CIO குழந்தைகள் "மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்" பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை பரிசாக வழங்கி பிரச்சார இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக்கூறினர்.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள், மஸ்ஜிதுல் இஹ்சான் நிர்வாகிகள், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு, SIO கோவை மாநகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.