News Channel

தேசியக் கருத்தரங்கம்

"கல்வி கொள்கைகளில் சமீபத்திய போக்குகள் (Recent Trends in Education Policies)" என்கிற தலைப்பில் ஒரு தேசியக் கருத்தரங்கம் ஜூன் 15, 2025 அன்று சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள ICC அரங்கத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு கிளையின் கல்வித் துறையுடன் இணைந்து அகில இந்திய முன்மாதிரி ஆசிரியர் சங்கம் (AIITA) தமிழ்நாடு கிளை இக்கருத்தரங்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.


தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்த சிறப்பு விவாதங்களையும், வளர்ந்து வரும் இந்தியாவில் இதுவரையான கல்விக் கொள்கைகளை விமர்சன ரீதியாக ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், தாளாளர்கள் என 44 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


காலை 9:50 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1:50 மணிக்கு நிறைவடைந்த
 இந்நிகழ்விற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் தமிழகத் துணைத் தலைவர் I. அஹ்மத் ஜலாலுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கல்விக்கொள்கைகள் குறித்த பழுத்த அனுபவம் நிறைந்த பின்வரும் அறிஞர் பெருமக்கள் தங்களது ஆய்வுரைகளை வழங்கினர்:

 டாக்டர் ஜஸிம் அஹ்மத், பேராசிரியர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, புது தில்லி.

  டாக்டர் யேரம் கான், இணைப் பேராசிரியர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, புது தில்லி.

 சகோ. V. ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத், கல்விக்குழு உறுப்பினர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு & தாளாளர், அன்னை ஆயிஷா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர், தமிழ்நாடு.

 திருமதி ஷைமா S, துணை ஆசிரியர், ஆரா மின்னிதழ்.

  டாக்டர் சதத் ஹுசைன், கல்விக் கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சியாளர்.

  திரு. M.D. ஃபரித், உறுப்பினர், தாலிமி வாரியம், புது தில்லி.


மேற்கண்ட ஒவ்வொரு ஆய்வறிஞர்களும் இந்தியக் கல்விக் கொள்கைகளின் வரலாறு, கல்விக் கொள்கைகளின் சமூக மற்றும் உலகளாவிய போக்குகள், புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தியுள்ள சமூக தாக்கங்கள், கல்விக்கொள்கை விவகாரங்களில் இனி கவனம் செலுத்தப்பட வேண்டிய புள்ளிகள் ஆகிய களங்களில் சிறப்பான ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். புதிய கல்விக் கொள்கை மீதான மாநில அரசுகளின் எதிர்வினைகள் மற்றும் குடிமைச் சமூகத்தின் பொறுப்புகள் பற்றிய விவாதங்களுடன் திறந்த கலந்துரையாடல் அமர்வு இறுதியாக நடைபெற்றது. 

முனைவர் M. சலாஹுதீன், தமிழகத் தலைவர், அகில இந்திய முன்மாதிரி ஆசிரியர் சங்கம் (AIITA) அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கு இனிதே நிறைவடைந்தது.


பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இக்கருத்தரங்கின் முழு நிகழ்வுகளின் ஆய்வறிக்கைகளும் புத்தகமாக தொகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.


இக்கருத்தரங்கின் உள்ளடக்கம், அமைப்பு மற்றும் தற்போதைய கல்விக் கொள்கை, அது பயணிக்க வேண்டிய பாதை, கல்வித்துறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றங்கள் என பல அம்சங்கள் குறித்தும் அக்கறையோடு விவாதித்த இக்கருத்தரங்கம் தேவையான நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நல்ல நிகழ்வு என்பதாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
கருத்தரங்கை நடத்துவதற்கு பங்களித்த அனைத்து ஆய்வறிஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் தம் நன்றிகளையும் மறவாமல் தெரிவித்தனர்.