ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரம் கீழ் இயங்கி வரும் அரிசிபாளையம் மஸ்ஜித் அன்நூர் பள்ளிவாசலின் ஏற்பாட்டில், ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (22 ஜூன் 2025) வெகுசிறப்பாக நடைபெற்றது.
"இதயங்களை இணைக்கும் ஹஜ்ஜுப் பெருநாள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சகோதர சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் முயற்சியாக மதநல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் உரைகள் இடம் பெற்றன.
நிகழ்வின் தொடக்கமாக, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு அரிசிபாளையம் மொஹல்லா பொறுப்பாளர் சகோ. ஹிஷாம் அவர்கள் இறைவசனங்களை ஓதினார்கள்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி Dr. நஸீருதீன் சாஹிப் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். நிகழ்வில் அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. கணேசன் மற்றும் ஒத்தகால் மண்டபம் கிறிஸ்தவ கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தை ஜாய் ஜெய்ஸீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதன் பின், "சமரசம்" இதழ் ஆசிரியர் ஜனாப் V.S. அமீன் சாஹிப் அவர்கள் சிறப்புரையாற்றினார். "தியாகம், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள்" என்ற கருத்தை மையமாகக் கொண்டு, மத இடைவெளிகளை நீக்கும் நிகழ்வுகளின் அவசியத்தை உணர்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட சகோதர சமுதாயத்தினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரத் தலைவர் ஜனாப் P. S. உமர் ஃபாரூக் சாஹிப் அவர்கள் நிறைவுரை வழங்கினார்கள். நிகழ்வினை மஸ்ஜித் அன்நூர் பள்ளிவாசல் தலைவர் ஜனாப். கிஸர் ஒமர் அவர்கள் வழிநடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சமுதாயத்தினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.