News Channel

வாழ்த்துச் செய்தி

நபி இப்ராஹீம்(அலை) வாழ்வுக்குத் திரும்புங்கள்
-------------------------------
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் வாழ்த்துச் செய்தி

ஹஜ்ஜுப் பெருநாளின் அடிநாதமாக இருப்பது ஏகத்துவம். அந்த ஏகத்துவத்தை நிலைநாட்டும் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுதல். கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முன்வருதல். இதுதான் ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்தான செய்தி.

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்தாம் ஹஜ்ஜின் நாயகர். படைக்கப்பட்ட அனைத்தையும் ஆய்வு செய்கின்ற மனிதன் படைத்தவனைக் குறித்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் படைத்தவனைக் குறித்து சிந்தித்தார்கள். ஒரே இறைவனின் பக்கம் திரும்பினார்கள். அதில் இறுதி மூச்சு வரை நிலைத்து நின்றார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் உணர்ந்த ஏகத்துவப் பேரொளியில் நடைபோட்டதுடன் அன்று சமூகத்தில் நிலவிய அறியாமை இருள் அகற்ற முயன்றார்கள். அன்றைய காலத்தில் மக்கள் படைப்புகளையும், சூரியன், சந்திரன், நட்சத்திரத்தையும் வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிம் ஓரிறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அப்படிச் சொல்லும் போது ஏற்பட்ட அத்தனை நெருக்கடிகளையும் எதிர்கொண்டு எல்லா தியாகத்திற்கும் தம்மை ஆட்படுத்திக்கொண்டார்கள்.

தாம் மட்டுமின்றி தம்முடைய மனைவி, மக்களையும் அத்தியாகத்திற்கு உட்படுத்தினார்கள். ஏகத்துவ இலட்சியக் குடும்பமான இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தினர் செய்த தியாகங்களை இந்தப் பெருநாளில் நாம் நினைவு கூர்வதால்தான் இதனை தியாகத் திருநாள் என்று அழைக்கின்றோம். எந்த தியாகத்தை நாம் நினைவு கூர்கின்றோமோ அதன் அடிப்படையில் நம் வாழ்வையும், நம் குடும்பத்தினரின் வாழ்வையும் அமைத்துக் கொள்ள முன்வர இந்த இந்தப் பெருநாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்.

சகோதரச் சமுதாயச் சொந்தங்களுக்கும் பகுத்தறிவுப் பகலவர் நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் பெருவாழ்வைக் குறித்து எடுத்துச் சொல்லும் நல் வாய்ப்பாக இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோமே தவிர கொள்கைச் சமரசமில்லை என்று இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் ஃபலஸ்தீன முஸ்லிம்களையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த பூமியில் அமைதி திரும்ப வேண்டும். குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமில்லாமல் கொன்றழிக்கும் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்காகவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.

இன்றைய சூழலில் நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பாடமும், படிப்பினையும் பெற வேண்டும். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்விற்குத் திரும்புவோம். அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

"ஈத் முபாரக்"

மெளலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு, புதுச்சேரி