News Channel

திருச்சியில் Visit Our Mosque நிகழ்ச்சி


22.10.2023 மாலை *Visit our Mosque - பள்ளிவாசலுக்கு பார்வையிட வாருங்கள்* சிறப்பு நிகழ்ச்சி திருச்சி பீமநகர் இலாஹி பள்ளிவாசலில்  நடைபெற்றது.

சகோதர சமுதாய மக்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இத்தகைய இந்நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

அதனடிப்படையில், திருச்சி பீமநகர்  இலாஹி பள்ளிவாசலில் இந்நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 7.15 வரை நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மாநகர தலைவர் ஜனாப்.ஹஜ் மொய்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

தொடக்கமாக மௌலவி. ஹஸீப் அஹ்மது பாகவி அவர்கள் பள்ளிவாசலின் பயன்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார். இறைவனை வணங்குவதற்காக கூட்டுரீதியான, தனிப்பட்ட வணக்க வழிபாடுகள் நடத்தவும், பிரார்த்தனைகளில் கவனம் செலுத்துவதற்காகவும் பள்ளிவாசல்கள் பிரதானமாக பயன்படுகின்றன. 
இரண்டாவதாக, நபிகளாருடைய காலம் தொட்டு மக்கள் சேவை களமாக பள்ளிவாசல்கள் செயல்படுகின்றன. மூன்றாவதாக, கலாசாலைகள், மாணவர்கள் பயிலும் வகையில் பள்ளிக்கூடங்களாக, கல்லூரிகளாக பள்ளிவாசல் வளாகங்கள் செயல்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த மூன்றும் உலகிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் நடைமுறையில் உள்ள அம்சமாகும்.
இது தவிர நபிகளாருடைய காலகட்டத்தைப் போல இப்பொழுதும் சில பள்ளிகளில் இட வசதியை பொறுத்து ஷரியத் நீதிமன்றங்களாக, மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மையங்களாக செயல்படுகின்றன. 
அத்துடன் பள்ளிவாசல்கள் சமத்துவத்தின் அடையாளமாக, சகோதரத்துவ கொள்கையின் குறியீடாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார். 
இது போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் மிகச் சரியான புரிதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றன. 

ஆகவே இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பள்ளிவாசல்களில் நடைபெறக்கூடிய வணக்க வழிபாடுகள் மற்றும் செயல்பாடுகளை காண வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக புனித ஜான்பால் உரையாடல் மன்றத்தின் இயக்குனர் இறைஅருட்பணி முனைவர். க. சார்லஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். பள்ளிவாசலுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. இது மிகப்பெரிய நெகிழ்ச்சியை எனக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது. இங்கே ஒன்றாக எல்லோரும் நின்று தொழும் காட்சியை காணும் பொழுது பெரும் சமத்துவத்தை கண்டேன். இறைவனை வணங்கிட வரும்போது அகச்சுத்தமும் புறச்சுத்தமும் தேவை  என்ற அடிப்படையில் *ஒழு* செய்ய வேண்டும் என்கின்ற செய்தியை அறிந்து கொண்டேன். அடிக்கடி இது போன்று, பள்ளிவாசலுக்கு வரும் எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. திருமதி.லிசி அவர்கள் பள்ளிவாசலில் பெண்கள் வருவதற்கான ஏற்பாடு இருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இத்தனை நாட்கள், பள்ளிவாசலுக்குள் பெண்கள் வரக்கூடாது என்ற தவறான எண்ணம் கொண்டிருந்ததை நினைத்து வருத்தப்படுகின்றேன். அதுபோல பள்ளிவாசலில் தையல் இயந்திரங்கள்,  வகுப்பறைகள் மக்கள் பயன்படுத்துகின்ற வகையில் இருப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்வதாக தெரிவித்தார்.

ஒரே தலைமையில்  தொழுகை நடத்தியது என் நெஞ்சைத்  தொட்டது. சமத்துவத்தை இதைவிட யாரும் சிறப்பாக நினைவூட்ட முடியாது என்று திரு.ரமேஷ் அவர்கள்  குறிப்பிட்டார். 

தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் அதன் வாயிலாக  மக்களிடையே துவேஷம்- வெறுப்பு வளராமல், இணககம் ஏற்பட வேண்டும் என்ற செய்தியை பலரும் பதிவு செய்தனர்.

முன்னதாக, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பெருமக்கள் மஃரிப் தொழுகைக்கு முன்பாகவே வந்து பள்ளியில் அமர்ந்து தொழுகை முழுவதையும்  பார்வையிட்டனர். 
அத்துடன் உளூ செய்யும் இடம், இயற்கை தேவைகளுக்கான ஏற்பாடு, பள்ளிவாசலின் மேல் தளத்தில் நடைபெறும் *தய்யிபா மகளிர் கல்லூரி* செயல்பாடுகளைப் பார்வையிட்டனர்.

மேலும், மறுபயன்பாட்டு ஆடை சேகரிப்பு நிலையம் செயல்படுவதை வியந்து பாராட்டினர்.

இறுதியாக, சத்தியச் சோலை பொறுப்பாளர் ஜனாப். நாசர் அவர்கள்
நன்றியுரை ஆற்றினார். உலக அமைதிக்கான பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.