News Channel

பன்மத ஒற்றுமையின் வெளிப்பாடு: ஈத் மிலன்  பெருநாள் சந்திப்பு

கும்பகோணம், ஏப்ரல் 7, 2025  

கும்பகோணம் காமராஜர் ரோட்டில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலய வளாகத்தில் நேற்று (06.04.2025) மாலை 6:30 மணிக்கு ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. கும்பகோணம் இஸ்லாமிக் சோசியல் வெல்பர் அசோசியேஷன் (கிஸ்வா) மற்றும்
 ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.  

நிகழ்வுக்கு கிஸ்வா தலைவர் ஹாஜி P.S. யூசுப், அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஹாஜி இன்ஜினியர் M.N. முகமது ரஃபி, சீமாட்டி குழும உரிமையாளர் ஹாஜி ஜியாவுதீன், குறிஞ்சி மெட்ரோ குழுமத் தலைவர் ஹாஜி பிர்தோஸ் கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஹாஜி எம். அப்துல் கலாம் ஆசாத் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.  
நிகழ்ச்சியை ஜனாப் ஹாஜா மாலிக் மற்றும் ஜனாப் அன்சார் அலி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஹாஜி எம். அப்துல் கலாம் ஆசாத் வரவேற்புரை நல்கினார்.  
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் ஜனாப் எம். முகமது யூனுஸ், "பன்முகம் கொண்ட நாடு இந்தியா. ஆன்மிகம் தான் இந்த நாட்டின் அடையாளம்" என்று குறிப்பிட்டார்.  
அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஹாஜி முகமது ரஃபி, "ரமளான் மாதம் மனிதநேயத்தைப் போற்றும் மாதம். இந்த ஈதுமிலன் பெருநாள் சந்திப்பு மகிழ்ச்சியான நிகழ்வாக உள்ளது" என்று கூறினார்.  
தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் (ஆதீன குரு, திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை):  
"அனைத்து சமயத்தினருடனும் அன்புடன் இணைந்து வாழ வேண்டும். ஒரே மதம் கொண்ட நாடுகள்கூட பிரச்சினைகளை சந்திக்கின்றன. இஸ்லாத்தை எடுத்துக்கொண்டால், அது அமைதியின் மார்க்கம்" என்று தெரிவித்தார்.  

மேதகு ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் (கும்பகோணம் மறைமாவட்டம்):  
"அனைத்து மதங்களும் கடவுளை ஒரே வழியில் தேடுகின்றன. தண்ணீரைப் போல, பெயர்கள் மாறினும் சாரம் ஒன்றே. இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெற வேண்டும். உரிமைகளுக்காக அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்" என்று கூறினார்.  

மௌலானா மௌலவி எம். முகமது இஸ்மாயில் இம்தாதி* (ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர், மனித வள மேம்பாட்டுத் துறை):  
"ஈதுமிலன் நிகழ்ச்சி தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டும்" என்று கூறிய அவர், பின்வரும் ஐந்து கருத்துகளை முன்வைத்தார்:  
1. எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும்.  
2. கருத்துக்களை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.  
3. குறைகளைக் கூறாமல் மன்னிக்கும் பண்பு வளர வேண்டும்.  
4. தவறான எண்ணங்களைக் கொள்ளக்கூடாது.  
5. ஆன்மிகத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.  

"இஸ்லாம் அமைதியின் மார்க்கம்" என்று அவர் வலியுறுத்தினார்.  

நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. கிஸ்வா செயலாளர் ஜனாப் எஸ். ஜாகிர் உசேன் நன்றி உரை நல்கினார்.  
350க்கும் மேற்பட்ட சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.  
இந்த நிகழ்வு, பல்மத ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு முன்மாதிரியாக அமைந்தது.

ஈதுமிலன் போன்ற நிகழ்வுகள் மூலம் சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை வலுப்படுத்தப்படும் என்பதே பங்கேற்ற அனைவரின் நம்பிக்கை.