மஹல்லா மாநாடு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
பாலக்கரை வட்டத்தின் சார்பில் ‘இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!’ (அல்குர்ஆன்-74:3) என்ற மையக்கருத்தில் மஹல்லா மாநாடு 19.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை திருச்சி முதலியார்சத்திரம் KMS ஹக்கீம் அரங்கில் நடைபெற்றது.
ஜனாப். காதர் மீரா அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி மாநாட்டை துவங்கி வைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி ஆலோசனைக் குழு உறுப்பினர், முனைவர். அப்துர் ரஜாக் அனைவரையும் வரவேற்று ஜமாஅத் பணிகளை விவரித்து துவக்கவுரை நிகழ்த்தினார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
திருச்சி கிளை தலைவர் ஜனாப். ஹஜ் மொய்தீன் மஹல்லா மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தலைமையுரை ஆற்றினார்.
ஜனாப். அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் (மொழிப்பெயர்ப்பாளர் & மாநிலச் செயலளார்- ஆராய்ச்சி & நூலாக்கம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்- தமிழ்நாடு & புதுச்சேரி) அவர்கள் மாநாட்டின் மையக்கருத்தில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், சிந்தனை, செயல். கொடுக்கல் வாங்கல், பேச்சு, நடத்தை என வாழ்க்கையின் பல்வேறு தளங்களிலும் இறைவனின் மேன்மையை பிரகடனப்படுத்துபவராக நாம் எவ்வாறு திகழ வேண்டும் எனும் கருத்துக்களை முத்தாய்ப்பாய் எடுத்துரைத்தார்.
அவ்வாறு திகழும்போது, நம்முடைய வாழ்வில் ஏற்படும் மறுமலர்ச்சிகளை எடுத்துக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஜனாப். A.P. அப்துல் நாசர் (கதீப், மஸ்ஜிதுல் ஹுதா & மாவட்ட அழைப்புப்பணி பொறுப்பாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்- பாலக்காடு, கேரளா) அவர்கள் மாநாட்டின் மையக்கருத்த்தில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையிலும், நடைமுறையிலும் எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இறைவனின் மேன்மையை பிரகடனப்படுத்தும் இறைநம்பிக்கையாளராக உருவாக முடியும் என்பதை சீறாவின் ஒளியில், பல்வேறு நபர்களின் அன்றாட வாழ்வின் நடைமுறை உதாரணங்களோடு விளக்கினார்.
நிறைவாக, சகோ. அ. உமர் பாரூக் நன்றியுரையாற்றினார். நிகழ்வை முனைவர். சலாஹுதீன் மற்றும் சகோ. தவ்ஃபிக் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.
இம்மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள், பெரியோர்கள், பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், பிரமுகர்கள், முஸ்லிம் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
சிந்தனையைத் தூண்டும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும் அனைவருக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது.
பாலக்கரை வட்ட ஊழியர்கள் மாநாட்டு ஏற்பாடுகளை வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். கடந்த இரு மாதங்களாக திட்டமிட்டு மாநாட்டு செய்தியைத் தொடர்ந்து மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்தனர்.
வல்ல இறைவன் நம் பணிகளை அங்கீகரித்து இம்மையிலும், மறுமையிலும் அளப்பரிய நற்கூலியை வழங்குவானாக!
புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!