சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பபு கோவை மாவட்டத்தின் சார்பாக போதையில்லா தேசம் எனும் மையக்கருத்தில் சாலிடாரிட்டி ட்ராஃபி 2024 – மாபெரும் விளையாட்டுத் திருவிழா மற்றும் போதையில்லா தேசம் விழிப்புணர்வுக் கண்காட்சி ஆகிய இருபெரும் நிகழ்வுகள் கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024 டிசம்பர் 7,8 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் மோதிய சாலிடாரிட்டி ட்ராஃபியில் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள்மற்றும் ரொக்கப் பரிசுகள் அடங்கிய பரிசு வழங்கும் விழா இன்று (8 டிசம்பர் 2024) மாலை 4 மணி அளவில் இஸ்லாமியா பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோவை காவல்துறை இணை ஆணையர் Dr.சரவணகுமார் அவர்களும், காவல்துறை துணை ஆணையர் Dr.அஜய் தங்கம் அவர்களும், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோ.கமாலுதீன் அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் திரு. P.S.உமர் ஃபாரூக் அவர்களும், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு கோவை மாவட்ட தலைவர் முனைவர்.அப்துல் ஹக்கீம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய காவல்துறை இணை ஆணையர் Dr.சரவணகுமார் அவர்கள் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ள போதைக்கு மாற்றாக விளையாட்டு என்ற முன்னெடுப்பை வெகுவாக பாராட்டினார். போதையில்லா தேசம் விழிப்புணர்வுக் கண்காட்சியினை முழுமையாக பார்வையிட்டதாகவும், மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை முழுமையாக வழங்கியிருப்பதாகவும் இணை ஆணையர் அவர்கள் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
தொடர்ந்து சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் சகோ.கமாலுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவருடைய உரையில் மாணவர்கள் போதை போன்ற கொடிய செயல்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து உரையாற்றினார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கைப்பந்து போட்டிகளில் கிரசென்ட் ரிடர்ன்ஸ் அணி முதல் பரிசையும், கரும்புக்கடை வாலிபால் கிளப் அணி இரண்டாவது பரிசையும் வென்றது. கால்பந்து போட்டிகளில் 18 வயதிற்கு கீழான வீரர்களுக்கான போட்டிகளில் டிராக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசைப் பெற்றது. கால்பந்து ஓபன் பிரிவில் YFFC அணி முதல் பரிசையும், கஸின்ஸ் FC அணி இரண்டாவது பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்கப் பரிசுகளும், பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு தனிநபர் விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மக்கள் தொடர்புத்துறைச் செயலாளர் திரு.அப்துல் ஹக்கீம் அவர்களும், கரும்புக்கடை காவல் ஆய்வாளர் திரு.தங்கம் அவர்களும், சாமீஸ் மசாலா மேலாளர் திரு.ஷாகுல் ஹமீது அவர்களும், டிஸ்கோ காஜா அவர்களும், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் செயலாளர் திரு.சினுஜ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
போதையில்லா தேசம் விழிப்புணர்வுக் கண்காட்சியினை இரண்டு நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் கண்டு பயனடைந்தனர்.
இப்படிக்கு
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு, கோவை மாவட்டம்.