News Channel

குடியாத்தம் கிளையில் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குடியாத்தம் கிளை சார்பாக 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை, இலவச தையல் பயிற்சி பெற்ற 10 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இரண்டு சகோதரிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடத்தப்பட்ட ஆறாவது பயிற்சிக் குழுவின் (6th Batch) நிறைவு நிகழ்வாகும்.
நிகழ்ச்சி இறைமறை வசனம் ஓதலுடன் தொடங்கியது. கிளைத் தலைவர் திரு. இக்பால் அஹ்மத் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் திரு. அப்துல்லா நாசிர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் முஹம்மத் நூருல்லாஹ் அவர்கள் சிறு தொழில்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். சகோதரர் யாசிர் அரஃபாத் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் கிளைப் பொறுப்பாளர் திரு. தாஹா பாய் அவர்களும், வேலூர் மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர் திருமதி நசீம் அவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இறுதியாக, “இயக்கமும், இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் மகளிரணிப் பொறுப்பாளர் உரையாற்றியதுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 30 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த 6 பெண்களும் பங்கேற்றனர். பெண்களின் திறன் மேம்பாடு, சுயதொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பயணம் தொடர்ந்து வருகிறது.