News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை 

 05 ஜனவரி 2026

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமிற்கு பிணை மறுக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் மாலிக் முஹ்தசிம் கான் அதிருப்தி

புது தில்லி: 2020 தில்லி கலவரம் தொடர்பான 'பெரிய அளவிலான சதி' (larger conspiracy) வழக்கில், மற்ற ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், 
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமிற்கு பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது ஏமாற்றமளிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அமைப்பின் துணைத் தலைவர் மாலிக் முஹ்தசிம் கான் தெரிவித்துள்ளார். 

இரண்டு அறிஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள், விசாரணை முடிவடையாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, நாட்டின் தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிய சட்ட நடைமுறைகள் குறித்த கடுமையான அரசியலமைப்பு, சட்ட மற்றும் தார்மீகக் கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

"விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது என்பது, நடைமுறையின் மூலமாகவே தண்டனை வழங்குவதற்குச் சமமாகும். இது அரசியலமைப்பின் 21-வது சட்டப்பிரிவின் (Article 21) அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வித பொறுப்பும் ஏற்காத இந்தத் தாமதங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருவரது சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. 

நீதித்துறை அமைப்பின் தாமதமே பிணை மறுப்பதற்கான காரணமாக மாறும் போது, அரசின் திறமையற்ற குற்றவியல் நீதி அமைப்பின் சுமை தனிநபர்கள் மீது அநீதியாகச் சுமத்தப்படுகிறது. இது தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தைப் பாழாக்குகிறது."

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பிரிவு 43D(5)-ஐ பிணை வழங்கும் நிலையில் பயன்படுத்துவது, 'பிணை' மற்றும் 'விசாரணை' ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைத் மழுங்கச் செய்து வருவதாக மாலிக் மோதசிம் கான் சுட்டிக்காட்டினார். 

"உண்மைத்தன்மை நிரூபிக்கப்படாத அரசுத் தரப்பு ஆதாரங்களைச் சார்ந்து பிணை மறுக்கப்படுவது, 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி' என்ற கோட்பாட்டைச் சிதைக்கிறது. குறுக்கு விசாரணை மற்றும் முழுமையான தீர்ப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில், பிணை விசாரணையை ஒரு 'மினி விசாரணை' (mini-trial) போல மாற்றுவது, விசாரணையின்றி சிறையில் அடைப்பதை ஒரு இயல்பான விஷயமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது," என்று அவர் எச்சரித்தார்.
ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில், ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டு, காலித் மற்றும் இமாம் மட்டும் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். 

மற்றவர்களுக்குக் கிடைத்துள்ள நிவாரணத்தை வரவேற்கும் அதே வேளையில், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட (selective) நிவாரணங்கள் சட்டத்தின் முன் சமநிலை மற்றும் பாரபட்சமற்ற தன்மை குறித்த கவலைகளை எழுப்புகின்றன என்றார். அனைத்துக் கைதிகளும் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்துள்ள நிலையில், சுதந்திரம் என்பது முரண்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் அமையக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் பரந்த ஜனநாயகத் தாக்கங்களைச் சுட்டிக்காட்டிய அவர், உரைகள், மக்களைத் திரட்டுதல் மற்றும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தொடுக்கப்படும் வழக்குகள், மாற்றுக் கருத்துக்களைக் ஒடுக்கும் சூழலை உருவாக்கும் என்று எச்சரித்தார். "பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் வரம்பை அரசியல் பேச்சுக்கள் மற்றும் போராட்டங்களுக்கு விரிவுபடுத்துவது, ஜனநாயக ஈடுபாட்டிற்கும் கருத்து வேறுபாடு தெரிவிக்கும் அரசியலமைப்பு உரிமைக்கும் அச்சுறுத்தலாக அமையும். 

தேசிய பாதுகாப்பு என்பது மறுக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது
ஆனால் சிவில் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கோ அல்லது அரசியலமைப்பு பாதுகாப்புகளை நிறுத்தி வைப்பதற்கோ அதனை ஒரு பொதுவான காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

மேலும், காலக்கெடுவுடன் கூடிய விரைவான விசாரணை, தொடர் சிறைவாசம் குறித்த முறையான நீதித்துறை ஆய்வு மற்றும் "பிணை என்பதே விதி, சிறை என்பது விதிவிலக்கு" என்ற அடிப்படைத் தத்துவத்தைத் தலைகீழாக மாற்றும் UAPA சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத் 
தேசியச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.