நான்குநேரியில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சின்னதுரை என்ற பட்டியலின மாணவனை ஆறு பேர் கொண்ட வேறொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெட்டிய நிகழ்வு மிகவும் வேதனை அளிக்கிறது.
தடுக்க வந்த அவரது தங்கை சந்திரா செல்வியையும் வெட்டியுள்ளனர். சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாத்தா கிருஷ்ணன் இறந்துள்ளார். சாதிய நச்சரவம் மாணவர்களுக்குள்ளும் ஊடுருவியிருப்பது நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறார்கள் என்ற காரணத்தினால் இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவனின் கல்விச் செலவை ஏற்பதனால் மட்டுமே இந்த வெட்டுக்காயங்களுக்கு மருந்திட முடியாது. சாதிய பாகுபாட்டை முழு முற்றாகத் துடைத்தெறிய தமிழ்நாடு அரசு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சாதிய அடையாளங்களுடன் பெருமை பாராட்டும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாதிப் பெருமை பேசியும், எழுதியும் வரும் சாதியத் தலைவர்களின் சாதிப் பாகுபாட்டுச் செயல்பாடுகளைச் சட்ட ரீதியாக மட்டுப்படுத்த வேண்டும். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சக மனிதன் இழிவு படுத்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து, நாட்டை அழிவுப் படுகுழியில் தள்ளிவிடும்.
கல்வியிலும் நாகரிகத்திலும் முன்னேறி வரும் இக்காலத்தில் கூட இத்தகைய சாதிய வன்மங்கள் முற்றுப் பெறவில்லை எனில் தமிழ்நாட்டை சமூகநீதியின் மண் என்று பெருமை படப் பேச முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனமெடுத்து இத்தகைய இழிசெயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மௌலவி
முஹம்மது ஹனீஃபா மன்பஈ
மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி