சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி அணைக்கரைப்பட்டி முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் அணைக்கரை பட்டியில் முஸ்லிம் மற்றும் சகோதர சமுதாய மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 17 /3/ 2024 அன்று நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளர் ஜனாப், நஜீர் ஹுசைன் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் அணைக்கரை பட்டியில் வாழுகின்ற சகோதர சமுதாயத்தை அழைத்து முஸ்லிம்களுக்கும் சகோதர சமுதாய மக்களுக்கும் மத்தியில் இருக்கக்கூடிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் தொடர்ந்து நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சமூக நல்லிணக்க மேம்படுத்தும் வகையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் கூறுகையில், நாட்டின் சூழ்நிலையில் இப்படியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் அனைத்து சமூக மக்கள் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்ற நிலையில் இந்த சமூக ஒற்றுமையை சீர்குலைக்க கூடிய விஷமிகள் தொடர்ந்து செயல்படுவதை பார்க்க முடிகிறது. அச்செயல்களை முறியடிக்க கூடிய வகையில் இப்படியான சமூக நல்லிணக்க நிகழ்ச்சி தொடர்ந்து அனைத்து தரப்பினராலும் நடத்தப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மற்றும் இந்த நோன்பு துறப்பு என்பது இஸ்லாமியர்களின் வாழ்க்கையையும், அவர்களுடைய பண்புகளையும், இறைவன் மெருகேற்றக்கூடிய ஒரு பயிற்சியாக வழங்கி இருக்கின்றான்.
நோன்பு நோற்கக்கூடிய எந்த ஒரு இறை நம்பிக்கையாளனும் தன்னுடைய வாழ்வில் எச்சூழ் நிலையிலும் தவறான நிலையில் சென்று விடாமல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சியாக இந்த மாதத்தை அவன் கடைபிடிக்கின்றான். இம்மாதத்தில் எடுக்கக்கூடிய பயிற்சி என்பது பிற மாதங்களில் தொடர்ந்து எடுக்கப்பட்ட பயிற்சியின் பிரதிபலன் வெளிவர வேண்டும் ! அப்படி வெளிவந்தால் தான் ஒரு இறை நம்பிக்கையாளுடைய நோன்பு அவனுக்கு பலனாக அமையும் இல்லையென்றால் வெறுமனே உண்ணாமல் இருந்ததும் பருகாமல் இருந்ததுமாக மாறிவிடும் என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள நோன்பின் மாண்புகளையும், நோன்பின் மூலமாக மனிதர்கள் அடையக்கூடிய பயிற்சிகளையும் மிக அழகிய முறையில் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு அணைக்கரைபட்டி முஸ்லிம் ஜமாத் தலைவர் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியை கிராத் ஓதி அழகுற வழி நடத்திய அணைக்கரைப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் அவர்கள் சிறப்பாக அமைத்துக் கொடுத்தார்கள்.
வருகை புரிந்த சகோதர சமுதாயம் மற்றும் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சமூக நல்லிணக்க நோன்பு சிறப்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.