News Channel

பத்திரிக்கை அறிக்கை

17 நவம்பர் 2026

ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீன மக்களின் இயற்கை வளங்கள் மீதான இறையாண்மையை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் 
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி வரவேற்பு.

புதுடெல்லி: 
 2026 நவம்பர் 11 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி வரவேற்றுள்ளார். 
அந்தத் தீர்மானம், நிலம், நீர், எரிசக்தி வளங்கள் உள்ளிட்ட தங்கள் இயற்கை வளங்கள் மீது பலஸ்தீன மக்களுக்கு உள்ள பிரிக்கவியலாத உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி கூறியதாவது:

"இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. சுதந்திரமான பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டையும், அநீதிக்கு எதிரான அதன் எதிர்ப்பையும் இது பிரதிபலிக்கிறது. இந்தியாவுடன் சேர்த்து 150 ஐ.நா. உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்த வாக்கு, இந்தியாவின் வரலாற்றுப் பூர்வமான காலனியாதிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உறுதிப்பாடுகளுக்கும், பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்கான அதன் ஆதரவுக்கும் இசைவானதாகும்."

"இந்தத் தீர்மானம் பலஸ்தீன மக்களின் இயற்கை வளங்கள் மீதான உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சர்வதேச மனிதாபிமான சட்டம் உட்பட, சர்வதேசச் சட்டத்தின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுமாறு இஸ்ரேலை வலியுறுத்துகிறது. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களும் சுவர் கட்டுமானமும் சர்வதேசச் சட்டத்திற்கு முரணானவை என்றும், பலஸ்தீன மக்கள் தங்கள் இயற்கை வளங்களை அணுகுவதையும் கட்டுப்படுத்துவதையும் அவை கடுமையாகப் பாதிக்கின்றன என்றும் இத்தீர்மானம் மீண்டும் வலியுறுத்துகிறது."

"குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர் அமைப்புகள், மின்சார வலையமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் அழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீனர்களின் வீடுகள், குடிமக்கள் உள்கட்டமைப்புகள், விவசாய நிலங்கள், 
நீர்க்கிணறுகள் ஆகியவை இடிக்கப்படுவதையும் பறிமுதல் செய்யப்படுவதையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் இத்தீர்மானம் அழைப்பு விடுக்கிறது. 
இத்தகைய செயல்கள் மனிதாபிமான நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துகின்றன. 
பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத வளங்களையும் அவர்களிடமிருந்து பறிக்கின்றன."

பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் சுதந்திரமான பாலஸ்தீன நாட்டிற்கும் ஆதரவான தனது கொள்கை ரீதியான நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று JIH தலைவர் வலியுறுத்தினார்.

"பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்கான சர்வதேச ஆதரவு, 
அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், 
அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நீதியான நிலையான அமைதியை உறுதிசெய்யவும் உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புதுடெல்லி.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02WpEMiM2xSaQ5qRMrManQrUgHXUCTWVY6jvmGvaxopNffXbtcnhLpDpAY93bYyQ5Vl&id=100069543556736&mibextid=CDWPTG